நாகப்பட்டினம்

மீண்டும் நாகப்பட்டினம் – இலங்கை இடையே கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ‘நாகை, இலங்கை காங்கேசன்துறை இடையே செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. அதே மாதம் 23 ஆம் தேதி முதல் பருவமழை மற்றும் பல காரணங்களால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பிறகு சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு ‘சிவகங்கை’ என்ற பெயரில் கடந்த ஆண்டு (2024) ஆகஸ்டு மாதம் 16 ஆம் தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது.

இந்த பயணிகள் கப்பல் சனிக்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்கள் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வந்த நிலையில் கடல் சீற்றம் காரணமாக கடந்த 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கப்பல் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது கடல் சீற்றம் தணிந்து சீரான வானிலை நிலவுவதால் நேற்று நாகை-இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கி உள்ளது.

நேற்று காலை 7.30 மணிக்குநாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் இலங்கைக்கு புறப்பட்டது. நேற்று அந்த கப்பலில் 112 பேர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.