தமிழகத்தில் மேலும் நான்கு மாவட்டங்களில் இயற்கை எரிவாயுவை கண்டறிய ONGC-க்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பல வருடங்களுக்கு முன்பு, இந்திய எண்ணெய்வள நிறுவனமான ஓ.என்.ஜி.சி. தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் ஆராய்ச்சிகளை நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஆங்காங்கே எண்ணெய்க்கிணறுகள் தோண்டி எண்ணெய் எடுக்கப்பட்டது. இதனால் விவசாயம் பாழாவதாக குரல் எழுந்தது.
தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம் துவங்கியது. இதை எதிர்த்து விவசாயிகளும் பொதுமக்களும் கடுமையாக போராடியதை அடுத்து இத்திட்டம் நிறுத்தப்பட்டது
அடுத்து புதுகை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் துவங்கியது. இதை எதிர்த்தும் மக்கள் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து மத்திய அரசு, மக்களின் விருப்பம் இன்றி திட்டம் துவங்கப்படாது என அறிவித்தது. மாநில அரசும், சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க மாட்டோம் என்றது. ஆனால் இத்திட்டம் மீண்டும் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மீண்டும் போராடத் துவங்கியிருக்கிறார்கள்.
இந்த நலையில் தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இயற்கை எரிவாயு எடுக்க 21 கிணறுகள் தோண்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.