குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் திருவட்டாறு சிந்துகுமார் அவர்களது முகநூல் பதிவு:
கடந்த மூன்று நாட்களாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயத்துடனே காணப்படுகின்றனர். வானிலை எச்சரிக்கைகள் மேலும் பீதியைக்கிளப்புகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் ஒக்கி புயலால் பலரும் சொந்தங்களை இழந்தனர். நிலங்களில் நட்டு வைத்த மரங்கள் வேருடன் பெயர்ந்து ஏற்படுத்திய நஷ்டத்திலிருந்து இன்னும் மீளாத நிலையில் நேற்று இரவு பெய்த மிதமான மழை வலுக்குமோ? என்ற பயத்திலேயே பாதிபேர் தூங்கியிருக்க மாட்டார்கள். வழக்கத்தை விட வேகமான காற்று, இடைவிடாத இடி முழக்கம் என நேற்று பயத்துடனே கழிந்தது. இன்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என அறிவிப்பு வருகிறது. எங்கும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை தொடர்கிறது. சூரியன் லேசாக அவ்வப்போது எட்டிப்பார்த்துப்பார்த்து, கார்மேகங்களுக்கிடையே நகர்கிறான்.
காலையில் அருவிக்கரை பகுதியில் சென்றபோது அப்பகுதி மேகமூட்டத்துடனே காணப்பட்டது. மீண்டும் ஒரு ஒக்கி புயல் வந்து விடுமோ? என்ற பயத்தை யாரிடம் பேசினாலும் அறிய முடிந்தது. பலரிடமும் பேசப்பேச, இயற்கை சீற்றத்தின் முன்பு நாமெல்லாம் வெறும் தூசு என்ற எண்ணம் தான் மேலிடுறது.