ஐதராபாத்:

சிவசேனாவை தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து விலக தெலுங்கு தேசம் கட்சியும் முடிவு செய்துள்ளது.

முத்தலாக் முறைக்கு எதிராக சட்டம் கொண்டு வந்ததில் பாஜக மீது தெலுங்கு தேசம் அதிருப்தி அடைந்துள்ளது. அதோடு கடந்த 12ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து மாநிலம் சார்ந்த சில கோரிக்கைகளை சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக சந்திரபாபு நாயுடு பாஜக மீது அதிருப்தியில் உள்ளார்.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு இன்று பேசுகையில், “பாஜக.வுடன் நட்பு தர்மத்தை கடைபிடித்து வருகிறோம். கூட்டணியில் இருக்கும் இரண்டு கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குறை கூறக்கூடாது. ஆந்திரா பாஜக தலைவர்கள் தெலுங்கு தேச அரசுக்கு எதிராக பேசி வருகின்றனர். இதை மத்தியில் உள்ள தலைவர்கள் கண்டிக்க வேண்டும். கூட்டணியை தொடர விரும்பவில்லை என்றால் நாங்கள் எங்களது கரங்களை மடக்கி கொண்டு தனியாக செயல்படுகிறோம்.

ஆந்திரா எதிர்கட்சி தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி மீது சிபிஐ, அமலாக்கப் பிரிவு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதனால் அவர் பாஜக.வுடன் நெருங்க திட்டமிட்டுள்ளார். அவர் மத்திய, மாநிலத்தில் பாஜக.வுக்கு ஆதரவாக பேசி வருகிறார். ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்றால் எம்.பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என்று ஜெகன் மோகன் கூறியது என்ன ஆனது. சிறப்பு அந்தஸ்து வழங்காதபோதும் ஜனாதிபதி தேர்தல் அவர் ஆதரவு தெரிவித்தது ஏன்’’ என்றார்.

பல மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், சிவசேனாவை தொடர்ந்து தெலுங்கு தேசமும் பாஜக.வுடன் கூட்டணியை முறித்துக் கொள்வதாக தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.