திருவனந்தபுரம்
தந்தையை விட்டு 7 வருடங்களுக்கு முன்பு பிரிந்த மருத்துவர் நரேஷ் குமார் கொரோனா சேவை மூலம் மீண்டும் இணைந்துள்ளார்
இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கேரளாவில் கண்டறியப்பட்டார். அதற்குப் பிறகு கேரளாவில் அதிக அளவில் கொரோனா பரவியது. குறிப்பாக காசரகோட் மாவட்டத்தில் இந்த பாதிப்பு அதிக அளவில் இருந்தது. அதையொட்டி மருத்துவர்களை அங்கு வந்து சேவை புரிய மாநில நிர்வாகம் அழைப்பு விடுத்தது. முதன் முதலாக அங்குச் சென்ற 12 மருத்துவர்களில் நரேஷ்குமார் என்னும் மயக்க மருந்து நிபுணரும் ஒருவராவார்.
சென்னையை சேர்ந்த நரேஷ்குமார் தனது பெற்றோர்கலுக்குஒரே குழந்தை ஆவார். அவர் தந்தை புகழ் பெற்ற மருத்துவர் என்பதால் அவர் நரேஷையும் ஒரு புகழ்பெற்ற மருத்துவர் ஆக்க விரும்பினார் நரேஷும் தான் ஏதாவது சாதனை செய்து தந்தையை பெருமை அடைய வைக்க விரும்பினார். ஆனால் அது நடக்காமலே இருந்தது. எம் பி பி எஸ் முடித்த பிறகு குஜராத் மாநிலத்தில் நரேஷ் எலும்பியலில் பட்ட மேற்படிப்புக் கல்வியில் சேர்ந்தார்.
ஆனால் அங்கு ராகிங், இன வேறுபாடு மற்றும் அதிக பணிச்சுமை இருந்ததால் அவர் படிப்பை நிறுத்தி விட்டார். இதற்காக அனைவரும் அவரை முட்டாள் தனமாக நடப்பதாகக் குறை கூறினர். அப்போதிலிருந்து நரேஷுக்கும் அவர் தந்தைக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இரண்டு வருடம் தனியாக மருத்துவம் செய்த பிறகு நரேஷ் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு கல்வியில் சேர்ந்தார்.
அங்கும் அவருக்குத் திருப்தி இல்லாததால் அவர் மயக்க மருந்து நிபுணர் பயிற்சியை மேற்கொண்டார். இதனால் அவரது குடும்பத்தினர் அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். மயக்க மருந்து நிபுணராக எவ்வித சாதனையும் புரிய முடியாது என்னும் தந்தையின் அறிவுரையை நரேஷ் ஏற்காததால் கடந்த 2011 முதல் இவருடன் பேசுவதைத் தந்தை நிறுத்தி விட்டார். அதன் பிறகு சாதாரணமாக ஓரிரு வார்த்தைகள் பேசிய தந்தை கடந்த 7 வருடமாக ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.
இரு மாதங்களுக்கு முன்பு நரேஷ் குமாருக்கும் அவரது துறை மூத்த மருத்துவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராற்றினால் நரேஷ் மிகவும் தனிமையாக உணர்ந்தார். அவரது பல நண்பர்கள் அவருக்கு எதிராகத் திரும்பி உள்ளனர். ஆனால் துறைத் தலைவர் இவருக்கு ஆதரவாக இருந்துள்ளார். அவர் கூறியபடி கொரோனா சேவையை மேற்கொள்ள நரேஷ் முன் வந்தார். காசரகோட் பகுதியில் கொரோனாவை ஒழித்ததில் நரேஷின் பங்கு அதிகமாக இருந்தது.
சில நாட்கள் கழித்து ந்ரேஷுக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அவர் பேசியபோது எதிர்முனையில் இவர் தந்தை பேசி உள்ளார். தந்தையுடன் உள்ள மனத்தாங்கலால் நரேஷ் அவர் எண்ணைச் சேமித்து வைக்கவில்லை. தந்தை நரேஷ் சுகமா எனக் கேட்டு பத்திரமாக இருக்குமாறு கூறியது நரேஷுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தாம் வெகு நாட்களாக ஏங்கிக் கொண்டிருந்த தந்தையின் பாராட்டை இந்த ஒரு நிமிட உரையாடலில் கிடைத்து விட்டதாக நரேஷ் மகிழ்ந்துள்ளார். இது குறித்து நரேஷின் துறை அதிகாரி தனது முகநூலில் பதிவு இட்டுள்ளார். அப்போது இவருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த அனைவரும் இவரை அந்த பதிவில் பாராட்டியதோடு தொலைப்பேசி மூலமும் பாராட்டு மழை பொழிந்துள்ளனர்.
நரேஷ் இது குறித்து, “காசரகோட் பகுதியில் நாங்கள் பணியைத் தொடங்கிய போது மத குருமார் 5 பேருக்குச் சிகிச்சை அளித்தோம். அவர்கள் குணம் அடையும் போது என்னை வாழ்த்தி நன்றி தெரிவித்து விட்டுச் சென்றனர். நான் எனது வாழ்க்கையில் நோயாளிகளின் நன்றியை பெற்றது அதுவே முதல் முறை. அடுத்ததாக எனது தந்தை என்னுடன் ஏழு வருடங்களுக்குப் பிறகு பேசி உள்ளார். கொரோனா கொடுமையிலும் எனக்கு நன்மை நிகழ்ந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.