சென்னை: நிவர் புயல் அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்த நிலையில், சென்னை உள்பட பல பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியது. பின்னர் தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தீவிர புயலாக மாறியிருப்பதாகக் கூறப்பட்டது. இதனிடையே புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே நவம்பர் 25 நள்ளிரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், நவம்பர் 26 2.30 மணி வரை முழுவதும் கரையைக் கடந்தது.
வானிலை ஆய்வு மைய தகவல்படி, தற்போது, புயலானது வலுவிழந்துக்கொண்டு வருகிறது. மேலும், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றும் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் கடந்த 2 நாட்களாக சென்னை மட்டுமின்றி, கடலோர மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை முழுமையாக கரையை கடந்தாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், மரக்காணம், ஆரணி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.