பிரயாக் ராஜ்:
கும்பமேளாவுக்கு வந்த பிரதமர் மோடி, துப்புரவுத் தொழிலாளர்களின் பாதங்களைக் கழுவினார். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை கேட்க அவருக்கு நேரமில்லாமல் போனது.
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளா செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கும்பமேளாவுக்கு வந்த பிரதமர் மோடி, துப்புரவுத் தொழிலாளர்கள் 5 பேரை அழைத்து அவர்களது பாதங்களை கழுவினார்.
அவர்களின் தூய பணிக்கு சேவை செய்தவதாக கூறப்பட்ட இந்த நிகழ்வை, ஏராளமான கேமிராக்கள் படம் பிடித்தன.
இந்த தொழிலாளர்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை.
பிரதமர் நம் பாதங்களை கழுவுகிறாரா?
அந்த 5 நிமிடங்களுக்குள் தங்கள் வாழ்க்கை நிலையை பிரதமருக்கு சொல்லிவிட துடித்தனர்…முடியவில்லை.
தினமும் குறைந்தது ரூ.500 சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று அவர்களது உதடுகள் முணுமுணுத்ததை, கேமிராக்காரர்களின் சப்தம் விழுங்கியது.
தங்களுக்கு நிரந்தர வேலை வேண்டும் என்று சொல்ல வந்த அவர்களுக்கு மரியாதை கிடைத்ததே தவிர, அதிகாரிகள் பேச விடவில்லை.
உத்திரப் பிரதேசத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கும்பமேளாவுக்கு துப்புரவு பணிக்கு வரும் தங்கள் வாழ்க்கையை பிரதமருடனான இந்த சந்திப்பு புரட்டிப் போட்டுவிடாதா? என்று 5 துப்புரவுத் தொழிலாளர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.
அவர்களது பாதங்களை கழுவினார் பிரதமர் மோடி. பரவசம் அடைந்தனர். அவர்களை கடவுள்களுக்கு சமமாக ஒப்பிட்டார். அனைவரும் மெய்சிலிர்த்துப் போனார்கள். தங்கள் தலை எழுத்து இன்னும் ஒரு விநாடியில் மாறப் போகிறது என்று நம்பிக்கையில், வாய் திறந்தனர்.
கேமிராக்கள் ‘பேக் -அப்’ சொல்ல, பிரதமர் மோடி அங்கிருந்து விறுவிறுவென நடந்து வெளியேறினார். பிரதமருக்கும் அவர்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போவதை உணர்ந்து , அனைவரும் பழைய நிலைக்கு திரும்பினர்.
நிஜத்திலும் ஒரு கனவு என்று எண்ணி, அரைகுறையாக வயிற்றை நிரப்ப வேலைக்கு கிளம்பினர் அந்த துப்புரவுத் தொழிலாளர்கள்.