புதுடெல்லி: ‘ஒஸாமா’, ‘பக்தாதி’, ‘முல்லா’, ‘பாகிஸ்தானுக்குப் போ’ போன்ற வார்த்தைகள், இன்று இந்தியாவின் பல பகுதிகளிலிருக்கும் பள்ளிகளில், சிறார்கள், அடிக்கடி தங்களையறியாமல், தங்களுடைய சக முஸ்லீம் சிறார்களை நோக்கி பயன்படுத்தும் வார்த்தைகள் என்று கேள்விப்படும்போது உங்களுக்கு எப்படி அதிர்ச்சியாக இருக்கிறது!

நமக்கே இப்படி அதிர்ச்சியாக இருந்தால், சம்பந்தப்பட்ட முஸ்லீம் சிறார்களின் தாய்மார்களுக்கு எப்படி இருக்கும்? இப்படித்தான் கேட்கிறார் நஸியா எரம் என்கிற எழுத்தாளர்.

‘Mothering a Book’ என்ற புத்தகத்தை எழுதியுள்ள அவர் மேலும் கூறுவதாவது, “மேற்கூறியதுபோன்ற வெறுப்பு சொல்லாடல்கள் கடந்த காலங்களில் அவ்வப்போது பயன்பாட்டிற்கு வரும்; பின்னர் காணாமல் போய்விடும். ஆனால், இன்றைய நிலையில், இந்தியா – பாகிஸ்தான் பதற்றம் உச்சத்தில் இருக்கும் ஒரு சமயத்தில், இத்தகைய சொல்லாடல்கள், சம்பந்தப்பட்ட குழந்தைகளை எந்தளவிற்கு பாதிக்கும் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அந்தக் குழந்தைகள் மோசமான புறக்கணிப்புக்கு உள்ளாவதோடு, சமயங்களில் உடல்ரீதியான தாக்குதலுக்கும் உட்படச் செய்கிறது. தேசப்பற்று என்கிற பெயரில் இயங்கிவரும் சில தொலைக்காட்சி சேனல்கள், இத்தகைய வெறுப்புணர்வை வளர்த்துவிடுவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

அத்தகைய சேனல்களின் வெறுப்பரசியலுக்கு பலியாகிறவர்கள் இதுபோன்ற குழந்தைகளாகவே இருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுடைய பெற்றோர் ஸ்தானத்திலிருந்து நாம் இந்த துன்பத்தை புரிந்துகொள்ள முயல வேண்டும்” என்கிறார்.

– மதுரை மாயாண்டி