சென்னை

மே 2 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் முழு ஊரடங்கு இருக்காது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் தமிழகம் மிகவும் தவிப்பில் உள்ளது.   வரும் மே 1 ஆம் தேதி முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.  ஆனால் தடுப்பூசிகள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம், கொரோனா மருந்து பற்றாக்குறை ஆகியவை தமிழக மக்களை மேலும் மேலும் அச்சுறுத்தி வருகிறது.

இது குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக வேலூர் முதல் நாசிக் வரை பலர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.  இது நெஞ்சைப் பிளப்பதாக உள்ளது.   மே மாதம் 1 முதல் 18 வயதை தாண்டியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதே வேளையில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உள்ளது.

மாநில அரசுகளே நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதன் விலையை மருந்து நிறுவனங்கள் உயர்த்தி உள்ளது.  இது மாநிலங்களுக்கு  பெரும் சுமை ஆகும்.   மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்.  மே மாதம் 2 ஆம் தேதிக்குப் பிறகு முழு ஊரடங்கு இருக்காது.   நாம் நம்பிக்கையுடன் செயல்படுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.