டில்லி

ரடங்கு முடிவடையும் நிலையில் ஊரடங்குக்குப் பிறகு பணி நேரங்களை 12 மணி நேரமாக நீட்டிக்க 6 மாநிலங்கள் முடிவு செய்துள்ளன.

கொரோனா தாக்குதல் காரணமாக ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு அதன் பிறகு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.  இதனால் அனைத்து தொழிலகங்கள், பணியகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.  ஊரடங்கு வரும் மே மாதம் 3 ஆம் தேதியுடன் முடிவடைவதால் பல தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு முடிந்து பணிக்குத் திரும்பும் ஊழியர்களின் பணி நேரத்தை 6 மாநிலங்கள் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக நீட்டித்துள்ளன.   ராஜஸ்தான் அரசு அத்துடன் அனைத்து அலுவலகங்கள் மற்றும் தொழிலகங்களுக்கு வாரத்தில் ஆறு நாட்களுக்குப் பணி புரிய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இதைப் போன்ற விதிகளைக் குஜராத், அரியானா, மத்தியப் பிரதேசம் பஞ்சாப் மற்றும் இமாசலப் பிரதேசம் உள்ளிடட மாநிலங்களும் அறிவித்துள்ளன.

ஆனால் இவ்வாறு அதிக நேரம் பணி புரியும் ஊழியர்களுக்கு அதற்காக எவ்விதம் இழப்பீடு வழங்கப்படும் என்பது குறித்துச் சரியான விளக்கம் அளிக்கவில்லை.  ராஜஸ்தான் மாநில அரசு ஒரு சில பணிகளுக்கு இந்த நேரம் ஓவர் டைமாக கருதப்படுமென தெரிவித்துள்ளது.   ஆனால் எந்தெந்த பணிகளுக்கு என்பதை அரசு தெளிவு படுத்தவில்லை.

குஜராத் மாநிலத்தில் தற்போது ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதிய அடிப்படையில் அதிகப்படி ஊதியம் வழங்கப்படும் எனவும் ஆறு மணி நேரத்துக்குப் பிறகு சிறிது ஓய்வு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.  ஆயினும் தற்போதுள்ள நிலையில் பல தொழில்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வழக்கமான ஊதியத்தையே அளிக்க முடியாத நிலையில் உள்ளதாகத் தொழிலதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

உழைக்கும் மக்கள் மன்ற டில்லி பிரிவு தலைவர் சந்தன்குமார், “தொழிலாளர்களின் கடுமையான போராட்டத்துக்கு பிறகே பணி நேரம் எட்டு மணி என்பது வரையறுக்கப்பட்டது.  இதை அரசு மாற்ற முடியாது.  இவ்வாறு அதிகரிப்பது சட்ட விரோதமானது.  இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் எனத் தெரிவித்துள்ளார்.