நாகர்கோவில்: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு. திமுக தலைமையில் ஆட்சி அமைய அதிமுகவில் இருந்து பலர் தூது விட்டனர் என கன்னியாகுமரியில் தேர்தல் பரப்புரை செய்து வரும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு இந்த மாத கடைசியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் திமுக, அதிமுக உள்பட பல கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தொகுதிவாரியாக சென்று மக்களை சந்தித்து,அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரையாற்றி வருகிறார்.
அதன்படி, இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், அங்கு மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு வருகிறார். அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்று பதில் கூறி வருகிறார். இறுதியில் உரையாற்றிய ஸ்டாலின், அதிமுக தலைவராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி , திமுக ஆட்சி அமைந்துவிடும் என்று பலர் கூறினார்கள். அதனால் பயந்துபோன பல அதிமுக தலைவர்கள், எனக்கு தூது விட்டனர். அவர்கள் யார் என்பதை சொல்ல நான் விரும்பவில்லை.சொன்னால் அது நாகரீகம் இல்லை.அவர்களுடைய மனசாட்சிக்கு தெரியும்.
அப்படி ஒரு ஆட்சி அமைத்திருந்தால் ,கலைஞர் அரசாக அமைந்திருக்காது. அப்படி முதலமைச்சராக விரும்பாதவன் நான். கோடி கணக்கான மக்களால் வாக்களிக்கப்பட்டு , திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய குறிக்கோள். அத்தகைய ஆட்சி தான் விரைவில் அமையப்போகிறது என்றார்.
ஸ்டாலினின் இந்த திடீர் பேச்சு… பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.