பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இளைஞர்கள் பலர் அவரை போன்று மீசையை வடிவமைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் பால்கோட் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இந்திய எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியாவின் மிக் ரக விமானம் இயந்திர கோளாறு காரணமாக பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது.
அதில் இருந்து பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அபிநந்தனை மீட்க இந்திய அரசு துரித நடவடிக்கையை எடுத்துக் கொண்டதுடன், அந்நாட்டு தூதரக அதிகாரியை அழைத்து பேசியது. இதையடுத்து, உலக நாடுகளின் அழுத்ததினால் இந்திய விமானி அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.
இரு நாட்களுப்பிறகு நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் வாகா எல்லையில் அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் அரசு ஒப்படைத்தது. இதன் மூலம் உலகளவில் அபிநந்தன் பிரபலமானார். அவரின் வீரத்தையும், துணிச்சலையும் புகழ்ந்து அனைவரும் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். தற்போது ரியல் ஹீரோவாக அபிநந்தன் மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிரார்.
இந்நிலையில் அபிநந்தனை பெருமைப்படுத்தும் வகையில் இளைஞர்கள் அவர் வைத்திருக்கும் மீசையைப் போல் தாங்களும் வடிவமைத்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அபிநந்தனின் மீசை குறித்து பேசப்பட்டு வருகிறது. தாடி வைத்திருக்கும் பலர் அவரை போல கன்ஸ்லிங்கர் மீசை வைத்து வருகின்றனர்.
இதனால் பெங்களூருவில் உள்ள சலூன் கடை ஒன்று தங்கள் கடைக்கு வந்து அபிநந்தன் போல் கன்ஸ்லிங்கர் மீசை வைப்போருக்கு 50 சதவிகிதம் கட்டணத்தில் தள்ளிபடி அளிப்பதாக அறிவித்துள்ளது. வீரத்தை பறைச்சாற்றும் அபிநந்தன் மீசை தற்போது ட்ரெண்டாகி வருகிறது.