டில்லி

கொரோனா தொற்றுக்கு பிந்தைய சூழ்நிலையில் சீனா அதிக அளவில் பொருளாதார லாபம்  ஈட்டியுள்ளதாக நிதி அயோக் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலக அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பல நாடுகள் பொருளாதார அடிப்படையில் வீழ்ச்சி அடைந்துள்ளன.   இந்த நிலையை மீண்டும் சீரமைக்கப் பல நாடுகள் முயன்று வருகின்றன.  இது குறித்து நிதி அயோக் (திட்ட ஆணையம்) நிபுணர்கள் கூட்டம் ஒன்று நேற்று நடந்தது.  இந்த கூட்டத்தில் நிதி அயோக் நிபுணர்கள் அறிக்கை ஒன்றை நிதிநிலை குழுவிடம் அளித்துள்ளனர்.

அந்த அறிக்கையில், “கொரோனா தொற்றுக்கு பிந்தைய சூழலில் சீனா மிகப் பெரிய பொருளாதார லாபத்த்ஃஐ ஈட்டி உள்ளது.   ஆனால் இந்தியாவில் பொருளாதார மீட்சி மிகவும் மெதுவாக இருக்கக் கூடும்.  சீனாவில் இருந்து பல உற்பத்தி நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன.  இவை இந்தியாவுக்கு வரக் கூடும் இதனால் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் முன்னேற வாய்ப்புள்ளது.

கொரோனாவுக்கு  பிறகு பொருளாதார மீட்சி எவ்வாறு மீள்வது என்பதில் சீனாவிடம் இருந்து இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், உள்ளிட்டவை பாடம் கற்க வேண்டும். இதில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு இன்னும் தொடர்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நிதிநிலைக் குழு உறுப்பினர்கள் இந்த நிபுணர்களின் அறிக்கையில் திருப்தி அடையவில்லை என கூறப்படுகிறது.   மேலும் அவர்கள் இந்தியாவின் பொருளாதார மீட்பு மற்றும் இந்தியப் பொருளாதாரத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறித்து மேலும் ஆய்வு செய்து மற்றொரு அறி9க்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.