விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சமில்லை. இந்த நிலையில் ஆண்கள் டீமில் கஞ்சா கறுப்பு, சினேகன் ஆகியோரால் பரணியை டார்ச்சர் செய்ய ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் பரணியை தகாத வார்த்தையால் திட்டி அடிக்கவும் பாய்ந்தார் கஞ்சா கறுப்பு.

இதையடுத்து எப்படியாவது பரணியை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர் கஞ்சா கறுப்பு மற்றும் அவரது “அணியினர்”. இதற்காக பரணி பெயரை எவிக்ஷனுக்காக நாமினேட் செய்தனர்.

ஆனால் மக்கள் வாக்களிக்காததால் கஞ்சா கறுப்பு வெளியேற்றப்பட்டார். பரணி பீக்பாஸ் வீட்டிலேயே நீடித்தார். ஆனால் பரணியால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஏற்கெனவே கஞ்சா கறுப்பு சொல்லி பிரச்சினையை ஏற்படுத்தி இருந்தார்.

தவிர பரணி வெளியேற வேண்டும் என பிக்பாஸ் குடும்பத்தினர் போராட்டம் நடத்தும் அளவுக்கு போனார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பரணி சுவர் ஏறிகுதித்து வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். இதையடுத்து விதிகளை மீறியதாக அவர் வெளியேற்றப்பட்டார்.

அவரை அண்ணன் அண்ணன் என்று கூறி வந்த ஜூலியும் மற்றவர்களுடன் சேர்ந்து பரணி குறித்து எதிர்மறையாக பேசி அதிரவைத்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பரணி இப்போது எப்படி இருக்கிறார்?

இதோ அவரே சொல்கிறார்: “அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் தான் நன்றாக இருக்கிறேன். நிம்மதியா இருக்கிறேன். வீட்டில் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகிறேன். குடும்பத்துடன் முருகன் கோவிலுக்கு சென்று வந்தேன். வழியில் பார்த்த மக்கள் பலர் எ ன்னை நலம் விசாரித்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒப்பந்தப்படி நான் படங்களில் நடிக்கலாம். ஆனால் நூறு நாட்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசக்கூடாது” என்று தெரிவித்துள்ளார் பரணி.