சென்னை: 5 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இன்று நேரடி வகுப்புகள் தொடங்கியது. மாணாக்கர்கள் ஆர்வமுடன் கல்லூரிக்கு வந்து வகுப்புகளில் கலந்துகொண்டனர்.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் கொரோனா 2வது அலைக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் மருத்துவ மாணவர்களுக்கு தொடங்கப்பட்ட நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால், மருத்துவக் கல்லூரிகளை மீண்டும் ஆகஸ்ட் 16ந்தேதி முதல் திறந்திட தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது.
அதன்படி முதல்கட்டமாக, மருத்துவக் கல்லூரிகளில் இன்று இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரையிலான மருத்துவ மாணவர்கள், மருத்துவம் சார்ந்த மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மாணாக்கர்கள் ஆர்வமுடன் வகுப்புகளில் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி கூறும்போது, “மருத்துவக் கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கல்லூரிகள் இன்றுமுதல் திறக்கப்பட்டு இருப்பதாகவும், மாணவர்கள் இரண்டு டோஸ் தடுப்பு ஊசிகளையும் போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வகுப்பறையில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வகுப்பறைகளில் நோய் பாதிப்பைக் குறைக்கும் வகையிலும், நோய் பாதிப்பு ஏற்படாத வகையிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பு முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.