காபூல்: 
வேறு எந்த நாட்டிற்கும் தீங்கு விளைவிக்க இனி ஆப்கானிஸ்தானை யாரும் பயன்படுத்த முடியாது என்று தாலிபான் தெரிவித்துள்ளனர்.
அஷ்ரப் கானி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசைக் கவிழ்த்த தாலிபான்கள், முதல் முறையாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், ஆப்கானிஸ்தான் தற்போது விடுதலை பெற்று விட்டது என்றும், வேறு எந்த நாட்டிற்கும் தீங்கு விளைவிக்க இனி ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் யாரையும் பழிவாங்க விரும்பவில்லை  என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
அமெரிக்கா அல்லது முந்தைய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் கூட்டணி  அமைத்து தாலிபான்களுக்கு எதிராகப் போராடிய ஆப்கானியர்கள் யாரையும் குறிவைத்து விசாரணை நடத்தப்படாது என்றும் தெரிவித்தார்.
தாலிபான் அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியை நிலைநாட்ட முயல்கிறது என்று முஜாஹித் மீண்டும் வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தான் இனி ஒரு போர்க்களம் அல்ல  என்றும், புதிய ஆட்சி,  மற்ற நாடுகளுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்றும் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிப்போம்; ஆப்கானில் சிக்கியுள்ள வெளிநாட்டினர் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்படலாம் என்றும், பத்திரிகை, ஊடகங்கள் நடுநிலையாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டவே 20 ஆண்டுகளாகப் போராடினோம் என்றும் இனி அமைதி நிலைநாட்டப்படும் என்றும் தெரிவித்தார்.