துபாய்

லகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் திருவிழா எனக் கூறப்படும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ளன.  இதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  இதனால் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  கால அட்டவணை குறித்த விவரங்களை இங்கு காண்போம்.

ஏழாவது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் மாதம் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரக நாடுகள் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் தகுதிச்சுற்று மற்றும் முக்கியச்சுற்றுப் போட்டிகள் கொண்டதாக நடத்தப்படுகின்றன.

இதில் தகுதிச்சுற்றில் குரூப் ஏ பிரிவில் அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் பங்களாதேஷ், ஓமன், பப்புவா நியு கினியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

தகுதிச்சுற்று போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். முக்கிய சுற்றில் சூப்பர் 12 சுற்றில், குரூப் 1 சுற்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆகிய அணிகளுடன் தகுதிச்சுற்றில் இருந்து தேர்வாகும் இரண்டு அணிகள் இடம்பெறும்.

அடுத்தாக குரூப் 2 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுடன் தகுதிச்சுற்றில் தேர்வாகும் இரண்டு அணிகள் இடம்பெறும். சூப்பர் 12 சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு முன்னேறும்.

பிறகு நவம்பர் 10-ந்தேதி முதல் அரையிறுதி போட்டியும், 11 ஆம் தேதி இரண்டாவது அரையிறுதி போட்டியும் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 14 ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது.  வரும் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும் முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஓமன் அணி, பப்புவா நியு கினியா அணியை எதிர்த்து விளையாடுகிறது.

உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 24-ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.