ஷாஜகான்பூர்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பாஜக ஆட்சி செய்து வரும் உத்தரப்பிரதேசத்தில் ஷாஜகான்பூரில் மாவட்ட நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்ற வளாகத்தில் மூன்றாம் தளத்தில் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். இறந்தவர் பெயர் புபேந்திர சிங் என்பதும் அவர் ஒரு வழக்கறிஞர் என்பதும் தெரிய வந்தது. அங்கு ஒரு நாட்டுத் துப்பாக்கி கிடந்துள்ளது.
காவல்துறையினர் வழக்கறிஞர் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அங்கு வந்த தடயவியல் நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்துள்ளனர். விசாரணையின் போது வழக்கறிஞர் யாருடனோ பேசிக்கொண்டிருந்த போது பயங்கர சத்தம் கேட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கொலைக்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.
நீதிமன்ற வளாகத்தில் ஒரு வழ்சக்கறிஞர் கொல்லப்பட்ட சம்பவத்தால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி டிவிட்டரில், “ஒரு வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்யப்பட்டது மிகவும் வேதனைக்குரியதும் அவமானத்துக்குரியதும் ஆகும். பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை எடுத்துக் காட்டும் இந்த சம்பவத்தால் யார்தான் இங்கு பாதுகாப்பாக உள்ளார்கள் என கேள்வி எழுந்துள்ளது” எனப் பதிந்துள்ளார்.