சென்னை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் முதல் அரசு பிளீடராக வழக்கறிஞர் பி.திலக்குமாரை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இதையடுத்து,அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆசி பெற்றார்.
மதுரையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அங்கு, அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் (உரிமையியல்/ குற்றவியல்) என 73 அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் உள்ளன. இதையடுத்து, கடந்த அதிமுக ஆட்சியில் அரசு பிளீடர் பதவி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு கட்சிகள் எழுந்த போட்டி காரணமாக, யாரையும் நியமிக்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தற்போது அரசு பிளீடர் இடம் நிரப்பப்பட்டு உள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் முதல் அரசு பிளீடராக பி.திலக்குமாரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திலக்குமார், திமுக சட்டப் பாதுகாப்புக் குழுவின் மதுரை மண்டலப் பொறுப்பாளராக உள்ளார். கடந்த திமுக ஆட்சியில் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வழக்கறிஞராகவும் பணிபுரிந்தார். அவர் தற்போது உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்குத் தற்காலிக அரசு வழக்கறிஞராக திலக்குமார் நியமிக்கப்பட்டார். அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இன்று வாழ்த்து பெற்றார்.
அதுபோல புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசு தலைமை உரிமையியல் வழக்கறிஞர் பா.முத்துக்குமார் , அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.