மதுரை,
மதுரையை அடுத்த மேலூர் பகுதியில் வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய காட்சி சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது.
மதுரை மேலூரில் ரவிச்சந்திரன் என்பவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவரை தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வீட்டு வாசலில் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு சென்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சி அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த காமிராவில் பதிவாகி உள்ளது.
மேலூர் நாகம்மாள் கோவில் தெருவை வசித்து வருபவர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன். இவர், தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்தார். வீட்டின் அருகில் வந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த மூன்று பேர், வீட்டின் முன்பு அவர் வண்டியில் இருந்து இறங்கியதும், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடினர்.
எதிர்பாராத இந்த தாக்குதலில் அவருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த ரவிச்சந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் வழக்கறிஞர் வீட்டில் பொருத்தியுள்ள காமிராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சியில் வழக்கறிஞரை, இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்களில், இருவர் ஹாக்கி மட்டை மற்றும் அரிவாள் கொண்டு கொலைவெறியோடு தாக்குதல் நடத்துவது பதிவாகியுள்ளது.
இதைக்கொண்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.