அதிமுக-வின் நிரந்தரப் பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான மறைந்த ஜெயலலிதா-வின் சொத்துக்கள் ஏலம் விடப்படுகிறது.
1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்த போது தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் நடைபெற்ற சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக வைத்திருந்த 28 கிலோ தங்கம், 800 கிலோ வெள்ளி, 10,000 புடவைகள், 91 கைக்கடிகாரங்கள், 44 ஏ.சி. மற்றும் 750 ஜோடி காலணிகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது. இதில் ஜெயலலிதா குற்றவாளி என அவரது மறைவுக்குப் பிறகு 2017 ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பாக வழக்கறிஞர் கிரண் எஸ் ஜாவலியை நியமனம் செய்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளிட்ட சொத்துக்கள் விரைவில் ஏலம் விடப்படும் என கூறப்படுகிறது.