புதுடெல்லி: நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் போன்ற பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்களுக்கு ராஜ்ய சபாவில் இடமளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் தனியாக 303 இடங்களைப் பெற்று பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் திகழ்ந்தாலும், அத்வானி, ஜோஷி மற்றும் சுஷ்மா உள்ளிட்ட தலைவர்கள் தேர்தலில் பலவித காரணங்களால் போட்டியிடவில்லை.

அத்வானி தற்போது தனது 90 வயதுகளில் இருக்கிறார். ஜோஷிக்கு தற்போது 85 வயதாகிறது. சுஷ்மாவுக்கு தற்போது வயது 67. கடந்த 2014ம் ஆண்டே, பாரதீய ஜனதாவின் பார்லிமென்டரி போர்டில் இடம்பெற்றிருந்த அத்வானி மற்றும் ஜோஷி ஆகிய தலைவர்கள், மார்கதர்ஷக் மண்டல் என்ற உப்புசப்பில்லாத ஆலோசனை கமிட்டிக்கு மாற்றப்பட்டனர்.

அத்வானி மற்றும் ஜோஷியை அமைச்சரவையில் சேர்க்காததற்கு 75 என்ற அதிகபட்ச வயது வரம்பு காரணம் காட்டப்பட்டது.
அதேசமயம், ராஜ்ய சபைக்கு ஆட்களை அனுப்புவதிலும் வயது வரம்பை கடைபிடிக்க வேண்டுமென்ற குரல்கள் பாரதீய ஜனதாவில் கேட்பதையும் மறுப்பதற்கில்லை.