இந்தியா டுடே விருது நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத்
இந்தியா டுடே விருது நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத்

டில்லி,
நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதாக பிரபல இதழான இந்தியா டுடே விருது வழங்கி கவுரவித்து உள்ளது.
முதலமைச்சர்  ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களால், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்து சாதனைபடைத்துள்ளதற்காக இந்தியா டுடே விருது வழங்கி கவுரவித்துள்ளது.
“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற உயரிய நோக்கத்துடன், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கல்வி, வேளாண், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாட்டிற்கு முன்னோடியான எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதலமைச்சரின் இத்தயை சீர்மிகு திட்டங்களால், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலம் எது என்பதை கண்டறிவதற்காக இந்தியா டுடே சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், வேளாண், கல்வி, சட்டம்-ஒழுங்கு, இ-கவர்னன்ஸ், சுகாதாரம், உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட 10 துறைகளில், நாடு முழுவதும் கள ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வின் முடிவில், நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது. இதற்காக,  இந்தியா டுடே, விருது வழங்கி கவுரவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதற்கான விருதை மத்திய நிதி அமைச்சர்  அருண் ஜெட்லியிடம் இருந்து தமிழக தொழில் துறை அமைச்சர்  எம்.சி சம்பத் பெற்றுக்கொண்டார்.
இந்தியா டுடே விருது பெறும் தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத்
இந்தியா டுடே விருது பெறும் தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத்

நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் கேரளா இரண்டாவது இடத்தையும், ஆந்திர மாநிலம் கடைசி இடத்தையும் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால்,
 உலக வங்கியும் மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை ஆய்வில் தமிழகம் பின்னோக்கி செல்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொழில் நடத்த உகந்த இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு 18வது இடத்திற்கு தள்ளப்பட்டது.   கடந்த ஆண்டு 12வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இந்த ஆண்டு பின்னோக்கி சென்று 18வது இடத்தை பெற்றுள்ளது.
அதேபோல்,விவசாயிகளுக்கு உகந்த மாநிலம் குறித்து நிடி ஆயோக் தயாரித்த பட்டியலில் தமிழகம் பின்னடைவை சந்தித்து 20வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.