சென்னை,
தனியார் பாலில் கலப்படம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன, அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி விடுத்துள்ளது.
தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அதிரடியாக கூறி தமிழகத்தில் பரபரப்பை கிளம்பினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
அமைச்சரின் குற்றச்சாட்டை தனியார் பால் நிறுவனங்கள் மறுத்தன. தனியார் நிறுவனங்களிடம் எதையோ எதிர்பார்த்து அமைச்சர் பேசுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், பால் கலப்பட விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்வ வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மனுவில், “பால் கெடுப்போகாமல் இருக்க ரசாயனம் கலப்பது தெரிந்தும் தமிழக அரசு தடுக்காமல் மெளனம் காக்கிறது. பாலில் ரசாயனம் கலப்பதாக தமிழக அமைச்சரே கூறுவது அதிர்ச்சி யளிக்கிறது. பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பால் கலப்படம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது, பால் கலப்படம் என்பது மிக முக்கியமான பிரச்னை. பால் கலப்படம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு, இது தொடர்பாக இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பால் கலப்பட பிரச்சனை மிகவும் தீவிரமானது என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.
மேலும் வழக்கு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.