அணிகள் இணைப்பில் பாஜகவின் குருமூர்த்தி: அன்றே சொன்ன நடராஜன்

நடராஜன் - குருமூர்த்தி

.தி.மு.க.வின் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். அணிகள் இன்று இணைந்துள்ளன. இந்த இணைப்பு முயற்சியில் பாஜகவின் கை இருப்பதாக பல நாட்களாகவே விமர்சனம் உள்ளது. இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது டில்லி சென்று மோடி மற்றும் முக்கிய பாஜக தலைவர்களை சந்தித்து வந்தது இந்த விமர்சனத்தை உறுதிப்படுத்தியது.  ஆனால் இதை பாஜக தலைவர்கள் மறுத்து வந்தனர்.

இந்த சூழலில் இணைப்பில் பாஜகவின் கை இருப்பது குருமூர்த்தி மூலம் உறுதியாகி உள்ளது. துக்ளக் இதழின் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி, பாஜகவின் பத்திரிகை முகமாகப் பார்க்கப்படுகிறார். தீவிர பாஜக ஆதரவாளர் இவர்.

நடராஜன் – குருமூர்த்தி

இன்று இவரை அ.தி.மு.கவின் அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பிறகு எடப்பாடி இல்லம் வந்து ஆலோசனை குறித்து எடப்பாடியிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அணிகள் இணைப்பில் பாஜக இருப்பது வெளிப்படையாகவே தெரியவந்திருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் பேசிய குருமூர்த்தி, ‘‘தமிழகத்தில் ஒரு கட்சிதான் குடும்ப ஆதிக்கத்தில் இருந்தது. இப்போது இன்னொரு கட்சியும் குடும்பத்தின் பிடியில் போய்க் கொண்டிருக்கிறது. இதை எதிர்க்க பலரும் பயப்படுகின்றனர். ஆனால், இதைப் பார்த்துக் கொண்டு ‘துக்ளக்’ சும்மா இருக்காது’’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

குருமூர்த்தியின் இந்த பேச்சுக்கு,  சசிகலாவின் கணவர் நடராஜன், தஞ்சாவூரில் நடை பெற்ற பொங்கல் விழாவில் பதிலடி கொடுத்தார். அப்போது நடராஜன், ‘‘தமிழகத்தை காவிமயமாக்க பாஜக திட்டமிடுகிறது. அதிமுகவை உடைக்கப் பார்க்கிறது. அதிமுக வுக்கு எதிராக குருமூர்த்தி தலைமையில் செயல்படுகின்றனர். என்னைப் போன்றவர்களுக்கு எந்த போலீஸ் பாதுகாப்பும் இல்லை. ஆனால், எந்தப் பொறுப்பிலும் இல்லாத குருமூர்த்திக்கு எதற்கு போலீஸ் பாதுகாப்பு? அனைத் தையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்’’ என்றார்.

ஆக, அ.தி.மு.க. விவகாரங்களில் குருமூர்த்தி மூலமாக பாஜக மூக்கை நுழைக்கிறது என்பதை கடந்த ஜனவரி மாதமே நடராஜன் தெரிவித்தார். அது இப்போது வெளிப்படையாக தெரிந்துவிட்டது.