சென்னை: தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி 16ந் தேதி மாவட்டங்களில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், விடியும், விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்கக் கூடிய செயல்களை மட்டுமே தொடர்ந்து செய்து வருகிறது இந்த விடியா திமுக அரசு. எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்திருந்தபோது, 10 ஆண்டுகளாக எதைச் சொல்லியும் மக்களை திசை திருப்ப முடியவில்லை என்ற எண்ணத்தை உள்வாங்கி, பொய்யைச் சொல்லி மக்களை திசை திருப்பலாம் என்று எண்ணி, திமுக பல பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, புறவாசல் வழியாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது.
மின் கட்டணத்தையோ, பேருந்து கட்டணத்தையோ, பால் விலையையோ உயர்த்தமாட்டோம் என்ற சொல்லி ஆட்சியில் அமர்ந்தவர்கள், வாக்குறுதிகளை காற்றில் எழுதியதாக, உண்மைகளை தண்ணீரில் எழுதியதாகக் கருதி, தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி, ஏற்கனவே மிகப் பெரிய துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் தமிழக மக்களை, அவர்களுடைய தலையில் ஆயிரம் செந்தேள்கள் கொட்டியதைப் போல, கடுமையான துயரத்தையும், வலியையும் ஏற்படுத்துகின்ற விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தும் என்பதையும் சொல்லி, மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த உயர்வு இம்மாதத்தில் இருந்தே அமலுக்கு வரும் என்ற அதிர்ச்சிகரமான செய்தியையும் சொல்லி இருக்கிறார்கள். மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள விடியா திமுக அரசை கண்டித்தும், அறிவிக்கப் பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் (16.09.2022) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வருகிற 16-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள, பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்கள் 22ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.