திருச்சி:

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன் அங்கிருந்து விலகி டிடிவி அணியில் இணைந்தார். அவருக்கு அமமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று திடீரென கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக டிடிவி அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து வி.பி.கலைராஜன் திமுகவில் சேருவார் என்று தகவல்கள் பரவியது. அதை மெய்ப்பிக்கும் வகையில்,   வி.பி.கலைராஜன் இன்று  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

தற்போது நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக   தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வரும் ஸ்டாலினை, வி,பி,கலைராஜன்,  திருச்சியில் சந்தித்து, தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைத்துக்கொண்டார்.

அப்போது பேசிய கலைராஜன்,  மு.க.ஸ்டாலின் சுட்டு விரல் காட்டினால், சிட்டாக பறந்து வேலை பார்ப்பேன் எனக் கூறினார். தமிழனத்தை காக்கும் துணிச்சல் மிக்க தலைவர் ஸ்டாலின் என்பதால் திமுகவில் இணைந்திருப்பதாக குறிப்பிட்டார். மேலும் பலர் திமுகவில் இணைய உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதை அடுத்து பேசிய மு.க.ஸ்டாலின், எந்தக் கட்சியையும் தாங்கள் சவாலாக கருதவில்லை என்றார். இன்னும் பல கட்சிகளில் இருந்து பலர் திமுகவில் இணைவார்கள் என நம்புவதாக கூறினார்.