புதுக்கோட்டை

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூட்டணியில் இல்லாத பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

நாளை மறுதினம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை மறுதினம் நடக்கிறது. இதையொட்டி அதிமுக – பாஜ இடையே நடந்த வார்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தையிபோதுஅதிக இடங்களை  பாஜக கேட்டது. அதிமுக இதை ஏற்காததால், கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து பாஜ விலகியது.  தமிழகம் முழுவதும் பாஜக  தனித்துப் போட்டியிடுகிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 8 ஆண்டுகளாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த பணிகளில் முறைகேடு நடந்துள்ளது என அதிமுக ஆட்சி மீது குற்றம்சாட்டினார்.   முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு ‘பாஜக கூட்டணியை விட்டுச் சென்றது நன்மைதான்’’ என்று பகிரங்கமாகப் பேசினார். மேலும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ‘‘தேவையற்ற கிரகங்கள் விலகியது. இனி நமக்கு நல்ல சகுனம் தான்’’ என்று கூறினார்.

ஆனால் புதுக்கோட்டையில் பாஜக வேட்பாளர்களுக்கு அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்துள்ளார். அரசியல் வட்டாரத்தில் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டையில் கீரமங்கலம் பேரூராட்சி 10வது வார்டில் பாஜ சார்பில் சுமதி, 11வது வார்டில் பாஜக சார்பில் ராஜாமணி போட்டியிடுகின்றனர்.  நேற்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே இவர்களை ஆதரித்து திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்துப் பேசினார்.

அவருடன் வேட்பாளர்கள் 2 பேரும் அருகில் இருந்தனர்.  விஜயபாஸ்கர் தரப்பில் இது குறித்து விசாரித்த போது, கீரமங்கலம் பேரூராட்சியில் மட்டும் அதிமுக – பாஜ இடையே கூட்டணி அமைந்துள்ளது என்றனர். பாஜக தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிடும் நிலையில், கீரமங்கலத்தில் மட்டும் கூட்டணி வைத்து பாஜக வேட்பாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆதரவு திரட்டியது அதிமுகவில் அதிர்ச்சியையும், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.