சுங்கான்கடை, நாகர்கோயில்
அதிமுக முன்னாள் பேரூராட்சி தலைவி லதா சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சுங்கான்கடையைச் சேர்ந்த லதா சந்திரன் (அதிமுக), கடந்த ஆட்சியில் ஆளூர் பேரூராட்சித் தலைவராகவும், ஆளுர் பேரூர் அதிமுக செயலராகவும் இருந்தார். இவர் தற்போது வீராணி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். லதா பேரூராட்சித் தலைவராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்குப் புகார்கள் வந்தன.
லதா சந்திரன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நேற்று காலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான காவல்துறையினர், சுங்கான்கடையில் உள்ள லதா சந்திரன் வீட்டுக்குச் சென்றனர். அப்போது வீட்டில் லதா சந்திரன், அவரது கணவர் மற்றும் மகன்கள் இருந்தனர். லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பேரூராட்சித் தலைவராக இருந்த காலத்தில் லதா சந்திரன் வாங்கிய சொத்துகளின் விவரம் மற்றும் அதற்கான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, சோதனை நடத்தினர். சுமார் 8 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. காவல்துறையினர் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிமுக பிரமுகர் வீட்டில் சோதனை நடத்தியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.