பா.ம.க.வுடன் கூட்டணியை உறுதி செய்தது அ.தி.மு.க…
மூத்த தலைவர்கள் எதிர்ப்பால் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை….
மக்களவை தேர்தல் இன்னும் நூறு நாட்களில் வரப்போகிறது.
தமிழகத்தில் அனைத்து கட்சிகளுக்கும் இந்த தேர்தல் முக்கியமானது என்றாலும் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க.ஆகிய கட்சிகளுக்கு ஜீவ-மரண போரட்டமாக இருக்கும்.
தி.மு.க.தோற்றால் மு.க.ஸ்டாலின் தலைமை கேள்விக்குறியாகும்.
அ.தி.மு.க.வீழ்ந்தால் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.ஆகிய இரண்டு ‘எஸ்’களும் ‘நோ’ ஆகி-கட்சி சேதாரமின்றி அப்படியே டி.டி.வி.தினகரன் கைக்குள் சென்று விடும்.
தினகரன் என்ற பிம்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள அ.ம.மு.க.சறுக்கினால் அவர் மட்டும் அல்லாது- சசிகலா உள்ளிட்ட மொத்த குடும்பமும், அரசியலில் இருந்து துடைத்து எறியப்படும்.
டாகடர் ராமதாசின் ‘ஒன் மேன் ஆர்மி’யான பா.ம.க.வுக்கு மேற்கண்ட கட்சிகளுக்கு உள்ளது போன்ற சிக்கல்கள் ஏதும் இல்லை என்றாலும் ,தேர்தல் பின்னடைவு –கட்சியின் அடுத்து கட்ட நகர்வை முற்றிலும் முடக்கி போட்டுவிடும்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ‘முதல்வர் வேட்பாளர்’ என்று முன்னிறுத்தப்பட்ட அன்புமணியே தோற்றுப்போனது- தொண்டர்களை சோர்வுற செய்திருப்பது நிஜம்.
கொள்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு ‘வெற்றியே பிரதானம்’ என்ற கணக்கை மனதில் கொண்டு தி.மு.க, அ.தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய 3 கட்சிகளுடன் பா.ம.க. திரை மறைவு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டது.
பா.ம.க.வை சேர்ப்பதில் ஸ்டாலின் ஆர்வம் காட்டவில்லை.
இரண்டு காரணங்கள்.
-வட மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குள்ள பா.ம.க.வுடன் சேரும் பட்சத்தில் அங்குள்ள தொகுதிகளை மட்டுமே அவர்கள் கேட்பார்கள். இதனால் தி.மு.க.வுக்கு பயன் இல்லை.
பா.ம.க.வை சேர்த்தால் தி.மு.க.வின் நீண்டநாள் நண்பரான திருமாவளவனை இழக்க வேண்டியிருக்கும் என்பது –மற்றொரு காரணம்.
அடுத்த ‘சாய்ஸ்’ ஆக இருந்தவர் தினகரன். மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் மட்டுமே வாக்குகளை வைத்திருக்கும் தினகரனுடன் சேர்வதால் துளியும் லாபம் இல்லை என உணர்ந்த அன்புமணி அ.ம.மு.க வை நிராகரித்தார்.
கடைசி வாய்ப்பாக இருந்த அ.தி.மு.க.வுடன் சுமுகமாக பேச்சு நடத்தி உடன் பாட்டை அன்புமணி நிறைவு செய்து விட்டார். 7 இடங்களை பா.ம.க.வுக்கு கொடுக்க அ.தி.மு.க. ஒப்புக்கொண்டுள்ளது.
தம்பிதுரை, பொன்னையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எதிர்ப்பால் பா.ஜ.க.வை , அ.தி.மு.க .கூட்டணிக்குள் கொண்டுவரும் முடிவை இரு ஒருங்கிணைப்பாளர் களும் மாற்றிக்கொண்டனர்.
‘’தேர்தல் முடிவுக்கு பின்னர் பார்த்து கொள்ளலாம்’’ என டெல்லிக்கு ஓலை அனுப்பி விட்டு – போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெறும் ஏற்பாடுகளை தொடங்கி விட்டது அ.தி.மு.க.
–பாப்பாங்குளம் பாரதி