சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் இந்த தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் மாநில துணை தலைவர் கஸ்ஸாலி போட்டியிடுகிறார்.

தேர்தல் நெருங்கி வருவதால் இந்த தொகுதியில் பிரசாரம் களை கட்டியுள்ளது. அதே நேரத்தில் தற்போது ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் அதிமுகவை சேர்ந்த சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஜெ.எம்.பஷீர் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும்  வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந் நிலையில் அதிமுக பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி நாகநாதன் சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். களிமண்புரம் என்ற இடத்தில பணப்பட்டுவாடா நடைபெற்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.