இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை இன்று மாலை முதல் நாளை வரை இருப்பதால், இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. கிருத்திகைத் தினத்தன்று முருகனை வழிபட்டு வாழ்வில் உயர்வு பெறுங்கள்….
ஞானத்தின் வடிவான முருகப் பெருமான் ஞானப்பழத்துக்காக தாய், தந்தையருடன் சண்டை போட்டுக்கொண்டு திருப்பழநிக் குன்றத்தில் நின்றது புராணக் கதை. அதுமுதல், குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக இந்துக்கள் வழிபட்டு வருகிறார்கள்.
உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடிக் கிருத்திகை விழா மிகவும் விசேஷமானது.
கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள், சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறுமுகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, எல்லா முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமரிசையாக நடக்கிறது.
காவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக் காவடி, செடில் காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும், பக்தர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தியும் ஆனந்த பரவசம் அடைகின்றனர்.
கோயில்களிலும், வீடுகளிலும் பொங்கலிட்டு அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து கந்த புராணம் பாராயணம் செய்து வணங்குகின்றனர். கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி போன்ற பக்திபாமாலைகளை பக்தி சிரத்தையுடன் பாடி விரதத்தை முடிக்கின்றனர். அறுபடை வீடுகளில் திருத்தணியில் இவ்விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலைகளில் சிறந்த மலையாக திருத்தணிகை மலையை கந்த புராணம் போற்றி புகழ்கிறது. திருத்தணி முருகனை இருந்த இடத்தில் இருந்தே மானசீகமாக வழிபட்டாலும் திருத்தணி என்ற பெயரை சொன்னாலும் நம் தீவினைகள் நீங்கும் என்பது அருளாளர்கள் வாக்கு.
முருகப் பெருமான் இத்தலத்தில் ஞான சக்தியாகிய வேலைத் தாங்கி நிற்கிறார். முருகனின் பதினாறு வகையான திருவுருவங்களில் இங்கு ஞானசக்திதரர் என்னும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக் கிருத்திகை தினத்தில் கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்னைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.
நம்பிக்கையுடன் மனமுருக பிரார்த்தித்து சகல நலங்களும் பெறுவோம்!