சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய அளவுக்கு தண்ணீர் நிரம்பி உள்ளதால், கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறப்பை நிறுத்தி வைக்கும்படி ஆந்திர அரசுக்கு தமிழகஅரசு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஜூலை 1ந்தேதி முதல் தண்ணீர் திறப்பை நிறுத்தக்கோரி கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கும் குடிநீர் வழங்கும் ஏரிகளான, பூண்டி, புழல், செம்பரம்பாக்கம, சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளிலும். இன்று (28/06/22) காலை நிலவரப்படி 8368 மி.கனஅடி (8.3டி.எம்.சி.) தண்ணீர் உள்ளது. இந்த ஏரிகளில் மொத்தம் 11ஆயிரத்து 757மில்லியன் கனஅடி (11.7டி.எம்.சி) தண்ணீரை சேமித்து வைக்கலாம். ஆனால், ஏரிகளின் பாதுகாப்பு கருதி 8.3டி.எம்.சியே போதுமானது என தமிழக நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.
இதனால், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறப்பை வருகிற 1-ந்தேதி முதல் நிறுத்த தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். அடுத்த கட்டமாக செப்டம்பர் மாதத்தில் தண்ணீரை திறந்து விடும்படி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, கிருஷ்ணா நதி தண்ணீரை ஆந்திர அரசு கடந்த (மே) மாதம் 5ந்தேதி திறந்து விட்டது. இது கடந்த 8-ந்தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்றிரவே பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 550 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான நீர் இருப்பதால் கிருஷ்ணா தண்ணீர் முழுவதும் தற்போது பூண்டி ஏரியிலேயே சேமிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், கிருஷ்ணா நீர் வரத்தும் இருப்பதால், அனைத்து குடிநீர் வழங்கும் ஏரிகளும் நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.