சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் ஆயுத பூஜை வரும் 14ந்தேதி ஆயுத பூஜையும், 15ந்தேதி விஜயதசமியும் கொண்டாடப்பட உளளது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கூடுதல் பேருந்துகள் 3 பேருந்து நிலையங்களில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 12, 13 தேதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்துத்துறை கூடுதல் பேருந்துகளை இயக்குகிறது.
அதன்படி, வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்
தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இதர பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.