போதையின் பிடியில்  சிக்கியிருப்பது…   சமூகமா? தனி நபர்களா? : அப்பணசாமி

Must read

குற்றம் கடிதல்: 7
சென்னை ஆர்.கே. நகர் மாநகராட்சிப் பள்ளி எதிரேயுள்ள ஒரு கடையில் போதை சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட செய்தி தொலைக்காட்சி நாடாவில் ஓடிக்கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சில தினங்கள் முன்பு சென்னை தண்டையார்பேட்டை, படேல் நகர் மாநகராட்சிப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுவன் பரத், பள்ளி அருகில் ஒரு கடையில் விற்பனை செய்யப்பட்ட போதை சாக்லெட்டை வாங்கிச் சாப்பிட்டதால் இன்னமும் மயக்க நிலையில் உள்ளார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் சோதனைகளில் பல இடங்களில் போதை சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இப் பிரச்சனையை மேலும் தீவிரமாக ஆராயும்போது இது ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் காணப்படும் நிகழ்வல்ல, மாநிலம் முழுவதும் பரவியிருக்கும் சமூகத் தொற்று என்பது புலனாகிறது. அதோடு நாட்டில் போதைப் பழக்கம் சராசரியாக 13 வயதில் அறிமுகமாகிறது என்ற புள்ளிவிவரத்தையும் இணைத்துப் பார்க்கையில் இதன் அபாயங்கள் இன்னும் எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பது புரிகிறது.

போதை சாக்லேட்
போதை சாக்லேட்

இப்போது இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. சட்ட மன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒரு திருமண வரவேற்புக்குச் சென்றுவிட்டு கால் டாக்சியில் திரும்பிக் கொண்டிருந்தோம். அண்ணா நகரில் நல்ல போக்குவரத்து நெரிசல் உள்ள ஒரு இடத்தில் ஒரு ‘குடி’ மகன் தள்ளாடியபடியே சாலையைக் கடந்து கொண்டிருந்தார். உடனே பேச்சு மதுவிலக்கு குறித்துத் திரும்பியது.
அப்போது டாக்சி ஓட்டுநர்  “சார் நான் இந்தியா முழுவதும் கேப் ஓட்டுகிறேன். பல வட மாநிலங்களில் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். பொதுவாகவே மது, போதைப் பொருளுக்கு அடிமையாகிறவர்களில் மாணவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். முன்பெல்லாம் சில மாத்திரைகள்,  தின்னர், பெட்ரோ, கிறிஸ்டல், கஞ்சா சாக்லேட் போன்ற பொருள்களை மாணவர்கள் பயன்படுத்தி அழிந்து போனதைப் பார்த்திருக்கிறேன். மீண்டும் மதுவிலக்கு வந்தால் இது போன்ற விஷ போதைக்கு மீண்டும் அடிமையாகி விடுவார்கள் சார்’ என்றார்.
அவர் கூறியது சற்று அதிர்ச்சியாக இருந்தது. ’டாஸ்மாக் கடைக்குச் சென்று ஒரு மாணவன் மது பாட்டில் வாங்குவதை விட இது எளிதாகக் கிடைக்கிறது சார்’ என்று அந்த டிரைவர் பேச்சின் நடுவே சர்வ சாதாரணமாகக் கூறிய தகவல் இன்னமும் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.
b
மற்றொறு நிகழ்வு நான் மாணவனாக இருந்தபோது நீண்ட நேரம் கண் விழித்துப் படிக்க முடியவில்லை என்பதற்காக ஒரு நண்பன் கடையில் மாத்திரை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறான். ஆனால் அவனால் கண் விழிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அப்படியே தூங்கிவிட்டான்.  இரண்டு நாள் தூக்கம் கலையாமல் கிடந்தான். இதனால் அவன் தேர்வே எழுத முடியாமல் போனது.
எங்கள் ஊரில் ஒரு டாக்டர் இருந்தார். இளைஞர்கள் அவரிடம் சென்று, ’சோர்வாக இருக்கிறது, நீண்ட நேரம் படிக்க முடியவில்லை’ என்றால் உடனே பி12 அல்லது மிகக் குறைந்த டோஸ் பெத்தடின் ஊசி போட்டு விடுவார். ஊசிக்கு வெறும் ஐந்து ரூபாய்தான் வாங்குவார். ஊசி மருந்தின் விலை ரெண்டு ரூபாய் போக அல்பம் மூன்று ரூபாய்க்காக இக் காரியத்தை அவர் செய்து வந்தார். கடைசியில் அதிகாரி ஒருவரின் மகனுக்கே ஊசி போடப் போய் அது மிகப்பெரிய பிரச்சினையாகி அந்த டாக்டர் ஊரை விட்டே செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
இதையெல்லாம் பார்க்கும்போது மதுவிலக்கு என்பது இரண்டு அம்சங்கள் கொண்டது. ஒரு பக்கம் மதுவை ஒழித்தால் மட்டும் போதாது. மறுபக்கம் இது போன்ற போதைப் பொருட்களையும் ’இரும்புக்கரம்’ கொண்டு கட்டுப்படுத்த வேண்டும். அரசு நினைத்தால் மதுவை ஒரே நாளில் ஒழித்து விடலாம், ஆனால் இது போன்ற போதைப் பொருட்கள் ரகசியமாக அதே சமயம் எளிதாகவும் சொற்ப விலையிலும் கிடைப்பதை எப்படித் தடுக்க முடியும்?
முன்பெல்லாம் குடியும் போதையும் 20 வயதுக்குப் பிறகே அறிமுகமாகியது. தற்போது குடியும் போதையும் சராசரியாகப் பள்ளிப் பருவத்திலேயே 13 வயதில் அறிமுகமாவதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலைச் சொல்கிறது.
 
ஓவியம்: தமிழ்
ஓவியம்: தமிழ்

 
’சைல்ட் லைன் இந்தியா’ என்ற நிறுவனம் அளிக்கும் அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்களைப் பாருங்கள்:

  • உலகம் முழுவதும் மட்டுமல்ல இந்தியாவிலும் குடிக்கும் போதைப் பொருட்களுக்கும் அடிமையான மாணவர்கள் மற்றும் பதின் பருவத்தினர் எண்ணிக்கை இதர மக்களில் போதைக்கு அடிமையானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட அதிகம்.
  • இந்தியாவில் சிகிச்சைக்கு வரும் போதை அடிமை நோயாளிகளில் 65 விழுக்காட்டினர் 15 வயதுக்கும் கீழானவர்கள்.
  • இந்தியாவில் ஒட்டுமொத்தமாக போதைப்பழக்கம் உள்ளவர்களில் 15 விழுக்காட்டினர் 20 வயதுக்கு உட்பட்டவர்கள்.
  • பெரும்பாலான மாணவர்கள் ஊசி மூலம் போதை மருந்தினை உடலில் செலுத்திக் கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

இப் புள்ளிவிவரங்களுடன் பள்ளிகள் அருகில் பெட்டிக்கடைகளில் போதை சாக்லெட் போன்ற பொருட்கள் சர்வ சாதாரணமாக விற்பனை செய்வதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதை விட அது எந்த அளவுக்கு அபாய நிலையை எட்டியுள்ளது என்பதையே காட்டுகிறது.
அது மட்டுமல்லாமல் சில குறிப்பிட்ட நோய்களைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகளையும் வலி நிவாரணிகளையும் தூக்க மாத்திரைகளையும் ஊக்கமளிக்கும் ஊசி மருந்துகளையும் மருந்துக் கடைகளில் இருந்து வாங்கிப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதற்கு மருந்துக் கடையினரும் மருத்துவர்களும் பணத்துக்காக ஒத்துழைக்கிறார்கள்.
மேலும், தற்போது வட மாநிலங்களில் புக்கா தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் போதைப்பொருட்கள் தமிழகத்துக்குள் தாராளமாகக் கடத்தி வரப்படுவதாகவும், அது தின்பண்டங்களில் கலக்கப்பட்டு சாக்லெட், மிட்டாய் என்ற பெயர்களில் பள்ளி, கல்லூரிகளின் அருகே கடைக்குக் கடை விற்கப்படுகிறதாம்.
மாணவர்கள் குறிப்பாகப் பதின் பருவத்தினர் இப் பழக்கத்து ஆட்படுவது அதிகரிப்பது எதனால்? முதலில் பெற்றோரிடமிருந்து நெருக்குதல். இந்தியாவில் 75% வீடுகளில் ஒருவருக்காவது குடிப்பழக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. வீட்டுக்குள்ளேயே மதுவின் வாசனை வீசும்போது குழந்தைகள் குறிப்பாகப் பதின் பருவத்தினரும் அதன் சுவையைத் தெரிந்து கொள்ள, ருசித்துப் பார்க்க விரும்புகிறார்கள். நேரடியாக அது கிடைக்காததால் சாக்லெட், மாத்திரை போன்ற பிற மாற்றுகளை முயல்கிறார்கள்.
இரண்டாவது தராள மயமாக்கத்தின் விளைவால் தங்கள் பிள்ளைகளின் மதிப்பெண் மட்டுமே பெற்றோருக்கு முக்கியமானதாகப் படுகிறது. அவர்களின் மற்ற செயல்பாடுகளை, அது ஆக்கப்பூர்வமானதாகவே இருந்தாலும் கூட பெற்றோர் கண்டு கொள்வதில்லை.
பல்வேறு சூழ்நிலைகளால் வளரும் பருவத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், மன அழுத்தங்கள், விடலைப் பருவத்துக்கே உரிய ’நானும் பெரிய மனுசந்தான்’ என்ற எண்ணம் போன்றவையும் காரணமாகின்றன.

மது போதையில் மாணவன் (கரூர்)
மது போதையில் மாணவன் (கரூர்)

எல்லாவற்றையும் விட ஊடகங்களின் பங்கும் எதிர்மறையாகச் செயல்படுகிறது. போட்டியிடவும் பழி வாங்கவும் தனது ஆளுமையை நிறுவவும் போதை ஒரு வகையில் துணை செய்கிறது என்பதை ஊடகங்களே கற்றுத் தருகின்றன.
ஆனால் மாணவர்களுக்கான சமூகக் கல்வி என்பது அறவே இல்லை. கதைகள், திரைப்படங்களின் முடிவில் சில நீதி போதனைகளைச் சொல்வதோடு நின்று விடுகிறது. கல்வி நிலையங்களில் அதுவும் கூட இல்லை. பல பள்ளிகளில் விளையாட்டுத் திடல்களே இருப்பதில்லை.
இந்தச் சமூகமும் இவை பற்றிய உணர்ச்சியற்று இருக்கிறது.
இன்று சுவாதி கொல்லப்பட்டாள் என்றால் அது என் மகள் இல்லை. நாளை வினுபிரியா தற்கொலை செய்து கொள்கிறாள் என்றால் அதுவும் நம் பிள்ளை இல்லை. போதை சாக்லெட் சாப்பிட்ட மாணவன் ஒரு வாரமாக மயக்க நிலையில் மருத்துவமனையில் இருக்கிறான் என்றால் அது யாரோ? என் பிள்ளை அந்தப் பக்கமே போக மாட்டான் என்று செய்திகளைக் கடந்து போய்க் கொண்டே இருக்கிறோம். நாளை நாமும் இந்தத் துன்பங்களின் பிடியில் ஆட்படலாம்.

More articles

Latest article