அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க பிப்ரவரி 6 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்ஐசி) அலுவலகங்கள் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளைகள் முன்பு நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மத்திய அரசு சாமானியர்களின் பணத்தை தங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு ஆதரவாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.

திங்கள்கிழமை (பிப்ரவரி 6) எல்ஐசி மற்றும் எஸ்பிஐ அலுவலகங்கள் முன்பு நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என்று கூறினார்.

எஸ்பிஐ மற்றும் எல்ஐசி போன்ற பொதுத்துறை வங்கிகள் அதானி குழுமத்திற்கு வழங்கியுள்ள கடனை அடுத்து நடுத்தர மக்களின் சேமிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.

அதானி விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு அமைக்கவேண்டும் என்று ஏற்கனவே எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகிறது.

இந்த நிலையில் எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பி.ஐ. கிளைகள் முன்பு காங்கிரஸ் கட்சியின் நாடுதழுவிய போராட்ட அழைப்பு மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.