டெல்லி: பிரபல தொழிலதிபர் அதானி குறித்து, அமெரிக்கா நிறுவனமான ஹிண்டன்பெர்க் வெளியிட்டு சர்ச்சை விவகாரம் குறித்து, செபி (SEBI) அமைப்பே விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வு குழு) விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபர்களில் அதானியும் ஒருவர். அதானி குழுமம் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் துறைமுகம், எரிசக்தி மற்றும் உணவுப்பொருள் உட்பட பல்வேறு தொழில்துறைகளில் இந்தியாவின் பல மாநிலங்களில் மட்டுமின்றி, பல அவெளிநாடுகளிலும் தொழில் செய்து வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அந்நிறுவனத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெறுகிறது.
தொழிலதிபர் அதானி பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் என்பதால், அவரது நிறுவனம் மீது காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றன. ஆனால், எந்தவொரு குற்றச்சாட்டும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் என்ற ஆய்வு நிறுவனம், கடந்த கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருப்பதாகவும் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது.
மேலும், அதானி நிறுவனங்கள் பங்கு மதிப்பில் உயர்வைக் காட்டி அதிக அளவில் கடன் பெற்றது, பங்குச் சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டது, அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது. மேலும், கணக்குகளில் முறைகேடுகளை செய்து பொய்யாக வெளியிட்டு வருவதாகவும், நிறுவன கடன்களை பெருமளவு மறைத்து இருப்பதாகவும், இதனால் பங்கு சந்தையில் தனது முதலீட்டாளர்களுக்கு உண்மையான தகவல்களை மறைத்த குற்றத்தை புரிவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த அறிக்கை இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கின. இதனால், அதானி குழுமம் பங்குச்சந்தையில் பெரும் சரிவை கண்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து அதானி வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து, ஹிண்டன்பெர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் செபியின் விதிமுறைகள் குறித்தும், பங்குச் சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
இந்த குழுவினர் விசாரணை கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி முடிவடந்த நிலையில், அக்குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், “அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க தேவையில்லை. அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த செபி அமைப்புக்கு அதிகாரம் உள்ளது .
அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் நிலுவையில் உள்ள 24 வழக்குகளில் இரண்டு வழக்குகளை 3 மாதங்களுக்குள் முடிக்க செபிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின்படி செயல்படுவது குறித்து அரசும் செபியும் பரிசீலிக்க வேண்டும் என்றும், ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்த ஒரு நிபுணர் குழுவின் பரிந்துரையை பரிசீலிக்குமாறு மத்திய அரசு மற்றும் செபிக்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம், பங்குச்சந்தை அந்நிய முதலீடு தொடர்பான செபி விதிகளில் நீதிமன்றம் தலையிட அவசியமில்லை. ஒழுங்காற்று அமைப்புகளின் அதிகார வரம்பிற்குள் நீதிமன்றம் தலையிட முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளது.