சென்னை: அதானி நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கக்கூடாது என தமிழக அரசியல் கட்சிகள், தமிழ்நாடு அரசை வலியுறுத்திய நிலையில், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள மின்சார மீட்டர்களை ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றும் திட்டத்தின், தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க முடிவு செய்து, அதற்கான டெண்டர் கோரியது. முதல் ஒப்பந்தத்தை அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடட் நிறுவனம் குறைந்த விலையில் டெண்டரை எடுக்க முன்வந்தது. இதை ஏற்று தமிழ்நாடு அரசும், அதானி நிறுவனத்துக்கு டெண்டரை ஒதுக்க முன்வந்தது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியுள்ள அதானி நிறுவனத்துக்கு டெண்டர் ஒதுக்கவும், அதை பராமரிக்கவும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து, ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
டெண்டரில் அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் தொடர்பாக மீண்டும் டெண்டர் விடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.