“அக்குபஞ்சர்” “மருத்துவர்” என்று தன்னை அழைத்துக்கொள்ளும் நபரின் தவறான அறிவுருத்தலால் பள்ளி மாணவர் பலியாகி இருப்பது திருப்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூரைச் சேர்ந்தவர், ஜெகதீஷ் என்கிற அய்யப்பன். இவப்ஸ திருப்பூர் அய்யப்பன் கோயில் அருகில் கல்லூரி சாலையில் இரு சக்கர பழுது பார்க்கும் கடை நடத்துகிறார். இவரது மகன் ப்ளஸ் டூ படிக்கும் சுபாஷ். (வயது 17)
சுபாஷ் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு தினமும் இருமுறை இன்சுலின் ஊசி போடப்பட்டது.
இந்த நிலையில் கோவையில் அக்குபஞ்சர் மருத்துவர் (அக்கு ஹீலர்) என்ற பெயரில் கிளினிக் நடத்தி வரும் பாலமுருகன் என்பவரிடம் சுபாஷை அழைத்துச் சென்றனர் அவரது பெற்றோர். இது குறித்து நம்மிடம் பேய பலியான மாணவர் சுபாஷின் தந்தை ஜெகதீஷ்,” அந்த அக்கு ஹீலர், பாலமுருகன், ” அக்குபஞ்சர் சிகிச்சையில் பூரண குணமடைய முடியும் எனவே இன்சுலினை நிறுத்துங்கள்” என்றார். இதையடுத்து சுபாஷூக்கு இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தினோம். அடுத்த இரண்டே நாளில் சுபாஷ் உடல் நிலை மிகவும் பலவீனமடைந்தது. இது குறித்து ஹீலர் பாலமுருகனை தொடர்புகொண்டபோது, “ இவ்வாறு ஏர்படுவது சகஜம் தான்.சுபாஷ் சுகமடையத் துவங்கிவிட்டார்” என்று தெரிவித்தார்.
ஆனால் மறுநாள் காலை சுபாஷூக்கு மிகவும் உடல் நலிவடையவே, மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்றவரால் அதற்கு மேல் பேச முடியாமல் கதற ஆரம்பித்துவிட்டார்.
ஜெகதீஷின் நண்பரான கொரிசங்கரிடம் பேசியபோது அவர், , “அக்கு ஹீலர் பாலமுருகன் சொல்லியதால் இன்சுலின் போடுவதை நிறுத்தியதில் இருந்து மாணவன் சுபாஷின் உடல் நிலை நலிவுறத் துவங்கியது. எதுவும் சாப்பிடமுடியவில்லை. இது குறித்து அக்குஹீலர் பாலமுருகனை தொடர்புகொண்டு கேட்டபோது, அப்டித்தான் இருக்கும்.. இது நலமாவதின் அறிகுறி..கவலைப்படாதீர்கள். எக்காரணம் கொண்டும் இன்சுலின் போாடாதீர்கள்” என்றார். ஆனால் மாணவன் சுபாஷ் உடல் நிலை மோசமான பிறகு தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார் அந்த அக்கு ஹீலர் பாலமுருகன்” என்றார்.
இந்த விவகாரம் குறித்து அக்குஹீலர் பாலமுருகனை தொடர்புகொண்டு பேசியபோது, அவர் ” நான் இதுவரை பல நோயாளிகளை குணப்படுத்தி இருக்கின்றேன். இது போன்ற அசம்பாவிதம் ஆயிரத்தில் ஒன்றாய் நிகழ்ந்துள்ளது. ஆங்கில மருத்துவம் உட்பட அனைத்து வகை மருத்துவத்திலும் உயிர்ப்பலி நிகழும் சாத்தியம் உள்ளது” என்றார்.
அக்குஹீலர் பாலமுருகன் பற்றி விசாரித்தபோது, இவர் கடந்த 2010 வரை போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தவர் என்று தெரியவந்தது. இவருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டதால் அக்குஹீலிங் முறையில் சிகிச்சை பெற சென்றிருக்கிறார். பிறகு, தானும் . திறந்த வெளி பல்கலைகழகத்தில் அக்கு பஞ்சர் அறிவியலில் டிப்ளோமோ படித்தருக்கிறார். பிறகு 2011 முதல் கோயம்பத்தூர் ராம்நகரில் கிளினிக் நடத்தி வருகிறார் என்பதும் தெரிந்தது.
மாணவன் சுபாஷ் மரணம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுவதாவது:
“பல பெரிய மருத்துவமனைகளில் உயிரிழப்பு ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்று எழுது கையெழுத்து வாங்கிக் கொள்கின்றனர். அதனையும் மீறி பல மரணங்கள் நிகழ்ந்துக் கொண்டு தான் உள்ளன.
ஆகவே மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் நாம் குறைகூறலாம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதனை விட்டு ஒரு மரணத்தை வைத்து ஒரு இயற்கை மருத்துவ முறையையே குறை கூறுவது சரியாகாது. மழை வெள்ளத்தில் போது மியாட் மருத்துவமனையில் நோயாளிகளை சாக விட்ட பெரும் முதலாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழக அரசும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் அந்த சம்பவத்திய பூசி மறைத்தது குறித்து நாம் மறந்துவிட்டோம்.
ஆகவே மாற்று மருத்துவம் என்பதை முழுவதுமாக தவறு என்று சொல்லமுடியாது. அதே நேரம் இந்த அக்குஹீலிங் உட்பட மாற்று மருத்துவத்தை முறையா கற்பதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும். ஒரு மாத பயிற்சி எடுத்துவிட்டு, அக்கு ஹீலர் என்று சொல்லிக்கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் செயல்படவும் தடை விதிக்க வேண்டும். மீறி இவர்களைப்போன்றவர்கள் சிகிச்சை அளித்தால் சிறைத்தண்டனை அளிக்க வேண்டும்” என்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள்.