சென்னை
நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்பரீஷ் இரிடியம் விற்பதாகக் கூறி ரூ.26 கோடி மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகவும் பிரபலமான தமிழ்ப்படம் சதுரங்க வேட்டை ஆகும். இந்த படத்தின் கதாநாயகன் இடியும் மின்னலும் சேர்ந்து உருவான இரிடியம் எனக் கூறி அது அரிசியைக் கவர்ந்து இழுக்கும் என மோசடி செய்து பண மோசடி செய்வார். இது கதை அல்ல நிஜம் என்பதை உணர்த்த சமீபத்தில் நடிகை ஜெயசித்ரா மகன் இது போல மோசடி செய்துள்ளார்.
ஒரு காலத்தில் நம்பர் 1 கதாநாயகியாக விளங்கிய நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்பரீஷ் ஒரு இசை அமைப்பாளர் ஆவார். இவர் ராகவா லாரன்ஸ் படம் ஒன்றுக்கு இசை அமைத்துள்ளார். இதைத் தவிர ஜெயசித்ராவின் இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு வாடகைக்கு வீடு கொடுத்த வகையில் தொழிலதிபர் நெடுமாறன் என்பவருடன் அம்பரீஷ் நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.
நெடுமாறன் மிகவும் தெய்வ பக்தி உள்ளவர். அவரிடம் அம்பரீஷ் இடியும் மின்னலும் சேர்ந்து உருவான இரிடியும் பொதிந்துள்ள ஒரு செம்பு பாத்திரம் தன்னிடம் உள்ளதாகவும் அதை மலேசிய நிறுவனம் இரண்டரை லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த பாத்திரம் பெரம்பலூரில் உள்ள 150 குடும்பத்தின் முத்துமாரியம்மன் கோவிலில் இருப்பதாகச் சொல்லி உள்ளார்.
மேலும் அந்த குடும்பத்துக்கும் மலேசியா எடுத்துச் செல்லும் செலவுக்குமாக மொத்தமாக ரூ.100 கோடி கொடுத்தால் அதே பாத்திரத்தை நெடுமாறனுக்குத் தாம் தருவதாகவும் அதை விற்று அவர் ரூ.2.5 லட்சம் கோடி பெறலாம் என அம்பரீஷ் தெரிவித்துள்ளார். அதை நெடுமாறன் நம்பாததால் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி என ஒரு நீக்ரோவை அழைத்து வந்து சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல் சுற்று அரிசியை கொட்டி அதை அந்த பாத்திரம் இழுப்பதாகக் காண்பித்துள்ளார்.
அத்துடன் பெரம்பலூரில் இருந்து வந்த 150 பேர் இதே தகவலை உறுதி படுத்தி உள்ளனர். அதைத் தொடர்ந்து அம்பரீஷ் தனது சொந்த செலவில் நெடுமாறனை மலேசியா அழைத்துச் சென்றுள்ளார். அவர் முன்னிலையில் அம்பரீஷ் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடவே அதை நெடுமாறன் நம்பி அந்த பாத்திரத்தின் விலை குறித்து பேரம் பேசி உள்ளார். அதன்படி ரூ.26.20 லட்சம் ரூபாயை அம்பரீஷ் நெடுமாறனிடம் இருந்து பெற்றுள்ளார்.
அந்த பணத்தில் சில கோடி ரூபாய்கள் மட்டுமே வங்கி மூலம் மாற்றப்பட்டுள்ளது. அம்பரீஷ் அந்த பாத்திரத்தை நெடுமாறனிடம் கொடுத்துள்ளார். அவரும் பாத்திரத்தை மலேசியாவில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் நெடுமாறனுக்கு பணம், வராததால் அம்பரீஷிடம் கேட்டதற்கு அவர் ஏதேதோ கூறி மழுப்பி உள்ளார். இது 5 ஆண்டுகள் தொடர்ந்துள்ளது.
அதன்பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையரிடம் நெடுமாறன் புகார் அளித்துள்ளார். அம்பரீஷ் தன்னையும் சிலர் ஏமாற்றி விட்டதாக நெடுமாறன் காலில் விழுந்து கதறி உள்ளார். அதை நம்பாத நெடுமாறன் புகாரைத் திரும்பப் பெறவில்லை. அம்பரீஷிடம் நடந்த விசாரணையில் தமது கூட்டாளிகளுடன் சேர்ந்து பண மோசடி செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
தற்போது காவல்துறையினர் அம்பரீஷை கைது செய்து சிறையில் வைத்துள்ளனர். அவரது கூட்டாளிகளைத் தேடும் பணி நடந்து வருகிறது. இதில் மேலும் சில சினி பிரபலங்கள் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே காவல்துறை கட்டுப்பாட்டில் அம்பரீஷை எடுத்து விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.