இரட்டை இலை சின்னம் தொடர்பாக டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர்.

செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாக கூறி தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் மீது புகார்கள் உள்ளன.

சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி ரூ. 200 கோடி மோசடி செய்ததாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ரூ. 10 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த பரிசு பொருட்கள் மற்றும் நடிகையின் விமானம், அவரது ஓட்டல் மற்றும் உணவுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்ததாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகை ஜாக்குலின் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பணம் பெற்றதை ஜாக்குலின் ஒப்புக்கொண்டதாக கூறப்படும் நிலையில், சுகேஷுக்கு எங்கிருந்து பணம் வந்தது என்பது குறித்த விவரங்கள் தெரியாது என்று விசாரணையின் போது கூறியதாக சொல்லப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள அபுதாபியில் இந்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் விழாவில் பங்கேற்பதற்காக அபுதாபி செல்ல தன்னை அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனு செய்துள்ளார்.