பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், தனது புகைப்படத்தை பல்வேறு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 09) வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சந்தீப் சேத்தி, நீதிபதி தேஜாஸ் காரியாவிடம், தனது வாடிக்கையாளர் தனது விளம்பரம் மற்றும் தனி உரிமைகளைப் பாதுகாக்கக் கோருவதாக மனு அளித்தார்.

காபி மக், டி-சர்ட், வால்பேப்பர் உள்ளிட்ட பல பொருட்களில் அவரின் புகைப்படத்தை பயன்படுத்துவதாகவும் அவற்றில் சில உண்மைக்குப் புறம்பாக AI உருவாக்கிய புகைப்படங்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஐஸ்வர்யாவின் புகைப்படத்தைப் பயன்படுத்திய சில நிறுவனங்களைக் குறிப்பிட்ட வழக்கறிஞர் அந்நிறுவனங்களை அவர் அங்கீகரிக்கவில்லை என்றும் கூறினார்.

“ஐஸ்வர்யா ராயின் பெயரையும் முகத்தையும் வைத்து பணம் பண்ணுகிறார்கள். அவரது பெயரும் உருவமும் ஒருவரின் பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. மிகவும் துரதிர்ஷ்டவசமானது,” என்று வழக்கறிஞர் சந்தீப் சேத்தி கூறினார்.

கூகிள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், அந்தஸ் அப்னா அப்னா வழக்கில் பிறப்பிக்கப்பட்ட ஒரு உத்தரவை குறிப்பிட்டு, அந்த வழக்கில் இணைப்புகள் வழங்கப்பட்டு, பின்னர் கூகிள் அவற்றை நீக்கியதாகக் கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிமன்றம், “உங்களைப் பொறுத்தவரை உத்தரவின் ஒரு பகுதியாக 151 URLகள் மட்டுமே உள்ளன. அவற்றை நீங்கள் அகற்றுங்கள்.

முறையீடுகள் அதிகளவில் இருப்பதால் ஒவ்வொரு பிரதிவாதிக்கும் எதிராக உத்தரவுகளை பிறப்பிப்போம், தனித்தனியாக தடை உத்தரவுகளை வழங்குவோம்” என்று கூறியது.

மேலும் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று வாய்மொழியாகக் கூறிய நீதிபதி, உத்தரவு பதிவேற்றப்படும் என்றும் வழக்கு விசாரணையை 2026 ஜனவரி 15ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் கூறினார்.