சென்னை:

சாலையோரக் கடையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டீ குடித்தது குறித்து கிண்டலாக ட்விட் செய்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளம், யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகியவற்றின் முதல்வர்கள் எளிமையாக பழகுவார்கள். சாலையோர டீ கடையில் டீ குடிப்பது, அனைவரையும் எளிமையாக சந்திப்பது என்று இயல்பாக இருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்திலோ, கட்சியின் வட்டச் செயலாளர் காது குத்து விழாவுக்குச் சென்றால்கூட பத்து கார்களில் அணிவகுத்துச் செல்வது வழக்கம். (விதிவிலக்கு, இரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள்.)

இந்த நிலையில் திமுக செயல் தலைவர் நமக்கு நாமே என்று தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது சாலையோர கடைகளில் டீ குடித்தது பெரிய செய்தியாக வெளியானது. அதே நேரம், “ஏற்கெனவே வேறு இடத்தில் தயாரான டீயைத்தான் கடைக்கு வரவழைத்து குடித்தார்” என்ற பேச்சும் எழுந்தது.

இந்த நிலையில் மருத்துவக்கல்லூரி துவக்க விழாவில் கலந்துகொள்ள நேற்று புதுக்கோட்டைக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு சாலையோர கடையில் டீ குடித்த சம்பவம் பெரிய அளவில் பேசப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பாமக நிறுவனர் டாக்கடர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்திருக்கிறார்:

“சாலையோரக் கடையில் டீ குடித்தார் எடப்பாடி பழனிச்சாமி: இதற்கு முன் இருந்தவர்கள் நடித்து முதல்வர் ஆனார்கள்… இவர் முதல்வராகி நடிக்கிறார்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கிண்டலாக தெரிவித்துள்ளார் ராமதாஸ்.