ஒரு தனியார் நிறுவனத்தின் தனியார் சேமியா விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதற்கு அவருக்கு கிடைத்த ஊதியத்தில் ஒரு பகுதியை அரியலூர் மாவட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவித் தொகையாக அளிக்க உள்ளார். இது குறித்து அந்த தனியார் நிறுவனத்தின் விழாவில் பேசுகையில் தெரிவித்தார்.
விஜய் சேதுபதி, “நான் அதிகம் விளம்பரப் படங்களில் நடிக்காம இருந்தேன். தற்போது அதை மாற்றிக் கொண்டு சில விளம்பரங்களில் மட்டும் நடிக்கிறேன். தற்போது நான் நடித்துள்ள இந்த விளம்பரத்தின் ஊதியத்தில் ஒரு பகுதியை நான் கல்வி வளர்ச்சிக்காக அளிக்கப் போகிறேன். அதாவது கல்வியில் பின் தங்கி உள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு 38,70,000 ரூபாயும், நமது மாநிலத்தில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு ரூ.5 லட்சமும், அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு ரூ. 5,50,000மும், ஹெலன் கெல்லர் பள்ளிக்கு ரூ.50000மும் ஆக மொத்தம் ரூ.49,70,000 நிதி உதவி வழங்க உள்ளேன். அரியலூர் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் எடுத்தும் டாக்டராக முடியாமல் போய் தற்கொலை செய்துக் கொண்ட அனிதாவின் நினைவாக இந்த தொகையை வழங்க உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.