சென்னை
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மீது நடிகர் சூரி திடர்ந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் சூரியிடம் சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் டிஜிபி மற்றும் அன்புவேல் ராஜன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. .
இதையொட்டி நடிகர் சூரி வழக்கு விசாரணையைச் சிபி சிஐடிக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சூரி தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால் விசாரணை நடத்தும் அதிகாரிகள் அவருக்குச் சாதகமாகச் செயல்படுவதாகக் கூறினார்.
இதையொட்டி நீதிபதி இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். தனது தீர்ப்பில் அவர், “இது போன்ற பணமோசடியில் உயர்பதவியில் உள்ளோர் ஈடுபடக்கூடாது. இந்த புகாரில் கோடிக்கணக்கில் பண மோசடி நடந்துள்ளதாக கூறப்படுவதால் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவு விசாரணைக்கு மாற்றப்படுகிறது. விசாரணையை 6 மாதங்களுக்குள் முடித்து அறிக்கை அளிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.