பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார்.

கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே இரண்டு பேர் கடந்த ஆண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து ஒரு சில மாதங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக தனது வீட்டை புதுப்பித்த சல்மான் கான், தனது பிறந்தநாள் மற்றும் ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது ரசிகர்களைப் பார்க்க வந்து நிற்கும் பால்கனியின் கண்ணாடிகளை குண்டுதுளைக்காத வகையில் மாற்றியமைத்துள்ளார்.

இந்த நிலையில், அவர் வசித்து வரும் அதே பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பை சமீபத்தில் ரூ. 5.34 கோடிக்கு விற்பனை செய்திருக்கிறார்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பு மும்பையின் மிகவும் பிரபலமான குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றான பாந்த்ரா மேற்கில் உள்ள ஷிவ் அஸ்தான் ஹைட்ஸில் அமைந்துள்ளது.

2023ம் ஆண்டு இந்த குடியிருப்பை மூன்றாண்டுகள் வாடகை ஒப்பந்தம் மூலம் வாடகைக்கு விட்ட சல்மான் கான், மூன்றாண்டுகளில் மொத்தம் சுமார் ரூ. 56.64 லட்சம் வாடகையாகப் பெற்றுள்ளார்.

1318 சதுர அடியில் கட்டப்பட்ட இந்த வீட்டை ரூ. 32.01 லட்ச பத்திர செலவில் விற்பனை செய்ததை ஸ்கொ யர் யார்டஸ் என்ற நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுமட்டுமன்றி மும்பையின் பல்வேறு இடங்களில் ஆடம்பர குடியிருப்புகளை சொந்தமாக வாங்கி வைத்திருக்கும் சல்மான் கான், சாண்டாக்ரூஸ் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள 23,042 சதுர அடி கொண்ட வளாகத்தை லாண்டகிராப்ட் ரீடெய்ல் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டிருப்பதாக ப்ராப்ஸ்டேக் என்ற மற்றொரு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வணிக வளாக இடத்தை மாதம் ரூ. 90 லட்சத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளதாகவும் சல்மான் கான் இதிலிருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ. 12 கோடி ஈட்டுவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இதற்காக அவர் 5.4 கோடி ரூபாயை அட்வான்ஸ் பணமாக வாங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.