ஒரு காலத்தில் அ.தி.மு.க.வின் முகங்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் ராமராஜன். முன்னாள் எம்.பி.
எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. இருந்த காலங்களிலும் தனது படங்களில் இரட்டை இலை சின்னத்தை காண்பிக்க தயங்காதவர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு அளித்து சில போட்டோக்களில் போஸ் கொடுத்தார். அதன் பிறகு இவரை ஆளையே காணோம்.
அவரை தொடர்புகொண்டு பேசினேன்.
ஏன் ஒதுங்கி இருக்கீங்க.?
ஒதுங்கி இல்லே.. ம்… ஏதோ இருக்கோம். ஒதுங்கி இருந்தா ஏன் ஆறு படம் நடிச்ச உடனே அரசியலுக்கு வர்றேன்?
ஆறு படம் நடிச்சவுடனே அரசியலுக்கு வந்தது நான்தான்.
எடப்பாடி – தினகரன் – ஓபி.எஸ். – நீங்க எந்த அணி?
நான் எப்பவுமே அம்மா ஜெயலலிதா தலைவர் எம்.ஜி.ஆர். அணிதான். (சிரிக்கிறார்) நமக்கு தலைவர் அம்மாதான். அதாவது, தொண்டர்கள் எந்தப்பக்கம் இருக்காங்களோ அந்தப்பக்கம்தான் நான்.. நானும் அடிமட்ட தொண்டன்தானே..
சரி, தொண்டர்கள் எந்தப் பக்கம் இருக்கிறதா நினைக்கிறீங்க?
நானும் அடிமட்டத்தொண்டன்தான். கட்சிக்கு உழைச்சு உழைச்சு ஒரு அடி கூட முன்னேறாம இருக்கிறவன் அடிமட்ட தொண்டன்தானே? (சிரிக்கிறார்)
அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நீங்க ஒரு ஃபெமிலியர் ஃபிகர் – வி.ஐ.பி.! நீங்க அப்படி சொல்லக்கூடாது!
இருக்கட்டும்.. இருக்கட்டும்! ஏதாவது பொறுப்பு இருந்தா மக்களுக்கு நல்லது செய்யலாம். நமக்குத்தான் ஏதும் இல்லையே..!
சரி, எடப்பாடி, ஓ.பி.எஸ்., தினகரன்.. யாருக்கு உங்க ஆதரவு?
அம்மா மறைவுக்குப் பின்னால சின்னம்மா பொதுசெயலாளர் ஆனாங்க.. அவங்களை ஆதரிச்சோம். ஆட்சிய பொருத்துவரை ஓ.பி.எஸ்ஸத்தான் அம்மா அடையாளம் காட்டினாங்க.. அதனால அவங்களை ஆதரிச்சோம். இப்போ இந்த மாதிரி ரெண்டு மூணு அணின்னு ஆனபிறகு நாம தொண்டரா பார்த்திக்கிட்டிருப்போம்னு இருக்கேன்.
ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு தெரிவிக்க தயாரா இருக்கீங்க..
ஆதரவு கொடுத்தாச்சே.. ஓ.பி.எஸ்ஸூக்கும் ஆதரவு கொடுத்தேன். சசிகலாவுக்கும் ஆதரவு கொடுத்தேன்..
இப்போ குழப்பமா இருக்கே..
ஆமா.. கட்சின்னா அப்படி குழப்பம் இருக்கத்தான் செய்யும். ம்.. அம்மா இருந்தப்போ கட்டுக்கோப்பா கட்சி இருந்துச்சு. அம்மாவோட அருமை இப்பத்தான் எல்லோருக்கும் தெரியுது.. ( சிரிக்கிறார்)
உண்மைதான்… முன்னாள் அமைச்சர் இன்னாள் அமைச்சரை மங்குனின்னு சொல்றாரு… இவரு அவரை அழுகிப்போன தக்காளினு சொல்றாரு.. ஜெயலலிதா இருக்கும்போது எவ்வளவு கட்டுப்பாடா வச்சிருந்தாங்கனு யோசிக்கத்தான் தோணுது..
ஆமா.. அப்பா அம்மா ஊருக்குப் போயிட்டாங்கன்னா பிள்ளைகள் கொஞ்சம் விளையாடுவாங்க.. திரும்ப வந்துட்டாங்கன்னா சரியாயிடுவாங்க..
குடியரசு தலைவர் தேர்தல்ல பாஜக வேட்பாளரை மூன்று அணிகளுமே ஆதரிக்குது. இது பத்தி என்ன நினைக்கிறீங்க..
மூணு அணியோ நாலு அணியோ.. நம்ம கட்சிதானே.. நமக்கு தேவை அண்ணா திமுகதான். நான் கட்சித் தொண்டன். அம்மா விசுவாசி. அவங்க புகழ் பாடுறேன். அவ்வளவுதான்.
ஆகஸ்டுக்கு மேல தான் யாருன்னு காட்டுவேன்னு தினகரன் சொல்றாரே..
சொல்றது சொல்லுவாங்க.. இப்ப நல்லாத்தானே போயிட்டிருக்கு. .. அவ்வளவுதானே..
ஆக்சுவலா இப்போ அ.தி.மு.க. யாரு தலைமையில இயங்குது?
தெரியலையே.. யாரைக் கேட்கணும் (சிரிக்கிறார்)
சசிகலாவா, தினகரனா, ஓபிஎஸ்ஸா, எடப்பாடியா.. யார்தான் தலைமைப் பொறுப்பு?
ஜெயலலிதாதான் தலைவர்னு நான் நினைக்கிறேன். தொண்டர்களும் அப்படித்தான் நினைக்கிறாங்க..
ஜெயலலிதாதான் இன்னைக்கும் தலைவர்னு சொல்றீங்களா..
ஆமா.. அவங்கதான் எப்போதும் எங்களு்ககுத் தலைவர்..
அவர் இறந்துட்டாரே.. இப்போ தொண்டர்களை வழி நடத்துறது யாருன்னு கேக்குறேன்..
அவங்க இறக்கவே இல்ல சார்.. இருக்கிறாங்க சார்.. தலைவர் வந்து 87ல இறந்தாரு.. அவர் இல்லாம ஆட்சி நடந்தது… அப்படின்னா அவரு இருக்கிறதாத்தானே அர்த்தம்.. அதே மாதிரி அம்மா இறந்து ஒரு வருசம் ஆச்சு.. ஆட்சி ஓடிட்டிருக்கு.. இன்னும் ஆட்சி தொடரும் . அதாவது அம்மா, தலைவர் ரெண்டு பேருமே இருக்காங்க.. வெற்றிடமே கிடையாது..
ஆனா அவங்க வந்து தொண்டர்கள்ட்ட நேரடியா பேச முடியாதுல்ல.. இருக்கிறவங்கதான் பேச முடியும்.. அதனால யாரு சொல்றதை தொண்டர்கள் கேட்கணும்னு நினைக்கிறீங்க..
அப்படியே போவுது.. எலக்சன் கிலக்சன் வந்தாத்தான் தொண்டர் மனநிலை தெரியவரும்..
இந்த நிலையில நீங்க வெளியில வந்து பேசினீங்கன்னா அதிமுக தொண்டர்களுக்கு நம்பிக்கையா இருக்கும்ல.
இருக்கும் இருக்கும்! பார்ப்போம்….
நீங்க தலைமைக்கு வரலாம்ல..
வரட்டும் வரட்டும்.. பார்ப்போம்..
சரி.. அடுத்த படம் என்ன…
ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன். . ஒரு மூணு வழியில வச்சிருக்கேன்.. தரைப்படை, கப்பல்படை, விமானப்படை மாதிரி.! போர் வரும்போது மூணு படையும் அவசியம் இல்லையா.. அது மாதிரி.. டைரக்ஷனுக்கும் ரெடியா இருக்கேண்.. நடிக்கிறதுக்கும் ரெடியா இருக்கேன்.. அது நமக்கு அமையணும்.. அவ்வளவுதான்.. அமைப்பு வரணும்..
ஜோதிடத்தில் ரொம்ப நம்பிக்கை போலிருக்கு..
ஆமா.. அதுலதான் ஓடிட்டிருக்கு. எல்லாத்துக்கும் ஒரு அமைப்பு வேணும்.
அதிமுகவுல இப்போ ஏகப்பட்ட அடிதடி நடக்குதே…
அண்ணன் தம்பி அடிச்சிக்கிறாங்க. இது சகஜம்தானே..
இது அதிமுகவுக்கு பின்னடைவுதானே!
நிச்சயமா இல்லை…!
இப்போதைய நிலைமையை பயன்படுத்தி திமுக ஆட்சியை பிடிக்குமோனு ஒரு பேச்சு இருக்கே…
ஆட்சி என்ன பூச்சியா.. டக்குன்னு புடிக்க? மக்கள் நினைக்கணும். எனக்குமவ“ அமெரிக்க அதிபர் ஆணும்னு ஆசைதான். நடக்குமா.. டிரம்ப் புடிச்சு காலி பண்ணிடுவாரு.
மத்தபடி என்னைக்குமே அ.தி.மு.கவுக்கு அழிவு இல்லை.”