டில்லி:

செக் மோசடி வழக்கில் நடிகர் ராஜ்பால் யாதவுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனையும், மேலும் அவர் ரூ.11.20 கோடியை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

பாலிவுட்டை சேர்ந்த நகைச்சுவை நடிகர் ராஜ்பால் யாதவ்.  இவர் சொந்தமாக படம் எடுக்க எண்ணி கடந்த 2010ம் ஆண்டு தொழில்அதிபர் ஒருவரிடம் ரூ.8 கோடி வாங்கி படத்தை தயாரித்தார்.

ஆனால், படம் வெற்றிபெறாத நிலையில் கடனை அடைக்க திண்டாடினார். இருந்தாலும், அவ்வப்போது செக்குகளை கொடுத்து ஏமாற்றி வந்தார். அந்த செக்குகள் பணம் இல்லாமல் திரும்பி வந்ததால், ராஜ்பால் மீது கடன் கொடுத்த  தொழிலதிபர்  டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இதுகுறித்த விசாரணை ஏற்கனவே முடிந்து கடந்த 16ந்தேதி,  நடிகர் ராஜ்பால் யாதவ், அவரது மனைவி ராதா ஆகியோரை, குற்றவாளி என டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத்தொடர்ந்து தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

அதில் பிரபல காமெடி நடிகரான ராஜ்பால் யாதவுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவர் வாங்கிய கடனுக்கு வட்டியும் சேர்த்து ரூ.11.20 கோடியை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அவரது மனைவி ராதா யாதவுக்கு ஜெயில் தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை. அவர் ரூ.70 லட்சம் பணத்தை திருப்பி செலுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து ராஜ்பால் சார்பில் அவரது வழக்கறிஞர் ஜாமின் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

இதன் காரணமாக சிறைக்கு செல்வதில் இருந்து நகைச்சுவை நடிகர் ராஜ்பால் யாதவ் தப்பினார்.