கபாலி படப்பிடிப்பிற்குப் பின், ஓய்வு எடுப்பதற்காக, அமெரிக்கா சென்றுள்ள ரஜினிக்கு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோடை விடுமுறைக்காக அமெரிக்காவுக்கு சென்ற ரஜினி, திரும்பிய பிறகு அவர் நடித்த, கபாலி பட இசை மற்றும் பட வெளியீட்டு விழா நடத்தப்படும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் திட்டமிட்டபடி ரஜினி நாடு திரும்பவில்லை. ஆகவே கபாலி படத்தின் இசை வெளியீட்டு விழா தள்ளிவைக்கப்பட்டது.
இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
“ஏற்கனவே, சிறுநீரக கோளாறு தொடர்பான சிகிச்சைக்காக, சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி, நலமுடன் ஊர் திரும்பினார். அதன் பிறகு, படப்பிடிப்பில் ‘பிஸி’யாக ஈடுபட்ட அவர், கபாலி படப்பிடிப்பு முடிந்ததும், டில்லி சென்று, வழக்கமான உடல் பரிசோதனை செய்து கொண்டார். அவரை பரிசோதித்த, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையில், சிகிச்சை பெறுமாறு கூறினர்.
இதையடுத்து, ஓய்வு எடுப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள ரஜினி, அங்கு சிகிச்சையும் பெற்று வருகிறார்ஜூலை, இரண்டாவது வாரம் ஊர் திரும்புவார். மற்றபடி ரஜினி முழு உடல் நலத்துடன் இருக்கிறார்.” என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.