தனி இடம் பிடித்த ராஜேஷ்.

தஞ்சை மாவட்டத்தில் பிறந்து பள்ளிக்கூட ஆசிரியராக பணி துவங்கிய ராஜேஷுக்கு, சினிமா பற்றிய கனவுகள் ஆரம்பத்தில் இருந்ததில்லை. இத்தனைக்கும் இயக்குனர் மகேந்திரனின் உறவினர்.
ஆனால் ராஜேஷின் சினிமாவையும் ஒரு கை பார்க்கலாம் என்று கனவு காண வைத்தவர்கள் முக்கியமான மூன்று பேர்.
இந்திய திரை உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என உலகப் புகழ் பெற்ற ராஜ்கபூர். இரண்டாவது நபர் துயர பாத்திரங்களில் நடித்தே வெளுத்து வாங்கிய ட்ராஜிடி கிங் திலீப் குமார். மூன்றாவது நபர் நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டிய பால்ராஜ் சஹானி. இந்த மூவரும் தான் தமக்குள் சினிமா கனவுகளை விதைத்தவர்கள் என்று நடிகர் ராஜேஷே அடிக்கடி சொல்லி இருக்கிறார்.

இவர்களை ஆதாரமாக வைத்துக் கொண்டுதான் உலக சினிமாக்களை பார்க்க ஆரம்பித்து இருக்கிறார் ராஜேஷ்.. இப்படித்தான் அவருடைய 1960களும் 70களின் துவக்கங்களும் ஓடி இருக்கின்றன.
1974ல் கே .பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை படத்தில் ஆரம்பத்தில் நடிப்பதற்கு கிட்டிய வாய்ப்பு கடைசிவரை கைகூடவில்லை. ஆனால் அதே பாலச்சந்தர் பத்தாண்டுகளுக்கு பிறகு அச்சமில்லை அச்சமில்லை படத்தில் ராஜேஷை கதாநாயகனாக நடிக்க வைத்து அவரது வாழ்க்கையில் ஒரு மைல் கல்லை அமைத்துத் தந்தார் என்பது தனி கதை.
நாம் முதலிலேயே சொன்ன மாதிரி நடிகர் என்பதையும் தாண்டி ராஜேஷ் பொது அறிவில் வல்லமை பெற்றவராக இருந்தார். அதனால்தான் பின்னாளில் நடிகர் என்பதையும் தாண்டி, ஜோசியம், ரியல் எஸ்டேட், உடல் ஆரோக்கிய குறிப்புகள் போன்றவற்றிலும் பலரும் வியக்கத்தக்க அளவில் வெற்றி கொடி நாட்டினார்.
பன்முகத்தன்மையிலும், அவருடைய ஒரு முகத்தன்மை இருந்தது என்னவோ சினிமாவில் தான்.
அறிமுகமான கன்னிப்பருவத்திலே படத்தில் பாக்யராஜுக்கு இணையாக பேச வைத்ததில்கூட நடிப்பு மீதான ஒருமுகத் தன்மையும் அர்ப்பணிப்புமே காரணம்.
1980 களில் ராஜேஷ் இணைந்து நடக்காத முழு நடிகர்களை கிடையாது. கதாநாயகனாக இருந்தாலும் சரி முன்னணி கதாநாயகர்களோடு சேர்ந்து நடித்தாலும் சரி, தன் பங்கை படத்தில் சோடை போக விட்டதே கிடையாது.

பாக்யராஜின் காதலியான அம்பிகாவின் கணவனாக வரும் அந்த ஏழு நாட்கள் படத்தின் அந்த டாக்டர் பாத்திரம்,
ஒரு பொறுக்கியாக இருந்து ஒரு இல்லறத்து பெண்ணை சீரழித்து விட்டு பிறகு அவளே மெச்சும்படி திருந்தி வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு மறையும் அந்த ‘சிறை’ படத்தின் அந்தோணி பாத்திரம்,
மனைவி மக்கள் செத்தாலும்கூட பரவாயில்லை, அரசியலில் உயர் பதவி அடைவது தான் லட்சியம் என பதவி வெறிபிடித்தலையும், சத்யராஜின் மக்கள் என் பக்கம் என் படத்தில் வரும் அரசியல்வாதி பத்திரமாகட்டும்..
ராஜேஷ் தனித்தே தெரிவார்.
சந்தர்ப்பசத்தால் தனக்கு மனைவியாகிவிட்டவளை அவள் காதலனிடம் சேர்க்கத் துடிக்கும் அந்த ஏழு நாட்கள் சாந்தமான டாக்டர் பாத்திரத்திற்கும் மக்கள் என் பக்கம் படத்தின் அடாவடி அரசியல்வாதி பாத்திரத்திற்கும் மையமானவர் அம்பிகா தான்.
என்றாலும் இது வேறு படங்களிலும் அம்பிகாவை கையாள ராஜேஷ் காட்டியிருக்கும் வித்தியாசம் அற்புதமாக இருக்கும்.
நடிகர் ராஜேஷை பொருத்தவரை ராஜ்கபூர் போல கிரேட்டஸ்ட் ஷோமேனாக வரவேண்டும் என்று விரும்பியவர்.

தமிழ்நாடு எம் ஜி ஆர் திரைப்படக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் முதல்வராக இருந்த போது தனது கனவுகள் மற்றவர்களுக்கு விதையாகவாவது மாறட்டும் என்று செயலாற்றி வந்திருக்கிறார்.
ஊடகங்களில் உடல் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி நிறைய பேசி வந்த நடிகர் ராஜேஷ், 75 வயதில் இன்று காலை மூச்சுத் திணறல் காரணமாக வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்து விட்டிருக்கிறார்.
நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து தனக்கென தனி இடம் பிடித்த நடிகை ராஜேஷை தமிழ் திரையுலக வரலாறு ‘எந்நாளும்’ தவிர்க்கவே முடியாது.
– செய்திப் பிரிவு